ஜெம் வீரமணி வழக்கில் அதிர்ச்சி திருப்பம்... சிக்கிய முக்கிய காவலர்கள்... வெளியானது பகீர் பின்னணி...!
ஜெம் வீரமணி வழக்கில் போலீசார் மீது நடவடிக்கை – 2 தலைமை காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் போலீசார் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கை முடித்து வைப்பதற்கான அறிக்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், ராஜ்குமார் உள்ளிட்ட இரண்டு தலைமை காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஜெம் வீரமணி மீதான வழக்கை கடந்த 2024-ம் ஆண்டு விசாரித்தபோது, விபச்சார தடுப்புப் பிரிவு-2ல் பணியாற்றிய தலைமை காவலர்கள் மலர்விழி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் விசாரணைக் குழுவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு மேற்கொண்ட விசாரணையில், வீரமணி மீதான வழக்கை முடித்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் இருவரும் உடந்தையாக இருந்ததாக தெரியவந்ததையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்படி தொடங்கியது இந்த வழக்கு?
கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறுமி தொடர்பான பாலியல் வன்கொடுமை காட்சிகள் அடங்கிய பென்டிரைவ் ஒன்று காவல்துறையிடம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெம் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!
ஆனால், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியையும், வீடியோவில் இருந்த நபரையும் அடையாளம் காண முடியவில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைப்பதற்கான அறிக்கை போலீசாரால் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்து, வீடியோவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி, சிறுமியை அடையாளம் கண்டு தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமி அடையாளம் காணப்பட்டு, அவரது வாக்குமூலமும் நீதித்துறை நடுவர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.
வீரமணி உள்ளிட்டோர் கைது:
வழக்கு மீண்டும் தீவிரமடைந்த நிலையில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, வீரமணியிடம் பணியாற்றிய கணேசனும் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிறுமிகள் தொடர்பான வீடியோக்கள் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவை அவருக்கு எவ்வாறு கிடைத்தன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
5 போக்சோ வழக்குகள் பதிவு:
இதற்கிடையில், வீரமணியால் பாதிக்கப்பட்டதாகக் கூறி சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பல்வேறு புகார்கள் வந்தன. அவற்றை ஆய்வு செய்த போலீசார், வீரமணி மீது தனித்தனியாக இதுவரை 5 போக்சோ வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
3 ஓட்டுநர்கள் கைது:
வழக்கு விசாரணையின் அடுத்தகட்டமாக, வீரமணியின் நீண்டகால கார் ஓட்டுநர்களான லாசர், பார்த்திபன் மற்றும் பாபு ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சிறுமிகளை வீரமணி அழைத்துச் சென்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும், அவருக்கு உடந்தையாக செயல்பட்டிருக்கலாம் என்றும் சிறப்பு புலனாய்வுக் குழு சந்தேகித்து விசாரணை நடத்தி வருகிறது.
அவர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் 8 செல்போன்கள் மற்றும் 55 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் நிர்வாகியிடம் மீண்டும் விசாரணை:
இந்த வழக்கில் 2024-ம் ஆண்டிலேயே காவல்துறையிடம் புகார் அளித்ததாகக் கூறிய காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது.
அவரிடம் வீரமணியுடன் தொடர்பு, சாந்தியுடனான தொடர்பு, வீடியோ ஆதாரங்கள் தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் ஏற்கெனவே கைப்பேசி மற்றும் சிம் கார்டு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போலீஸ் உயர் அதிகாரிகளின் பங்கு:
இதற்கிடையே, ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளின் பங்கு குறித்தும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையின்போது, வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மனுதாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்தது.
விசாரணை முறையாக நடைபெற்று வருவதால் தற்போது சிபிஐ விசாரணை தேவையில்லை எனக் கூறிய நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம் வழங்கி, வழக்கை அக்டோபர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிங்க: பூதாகரமாகும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... பாய்ந்தது 5வது போக்சோ வழக்கு... தீவிரமடையும் வழக்கு விசாரணை...!