×
 

டிஜிட்டல் உலகிற்கு அடிமையாகாதீங்க.. போதுமான தூக்கம் தேவை..!! மாணவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்..!!

மாணவர்களுக்கு போதுமான தூக்கம் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, பரீட்சா பே சர்ச்சா நிகழ்ச்சியின் 2026-ஆம் ஆண்டு 9வது பதிப்பின் 2வது எபிசோடில் மாணவர்களுடன் உரையாடினார். பல்வேறு நகரங்களில் (கோயம்புத்தூர், ராய்ப்பூர், குவஹாத்தி, குஜராத் உள்ளிட்ட இடங்களில்) இருந்து இணைந்த மாணவர்களுக்கு அவர் முக்கிய அறிவுரைகளை வழங்கினார். 

இந்த எபிசோட், முந்தைய பகுதியின் தொடர்ச்சியாக அமைந்தது. பிரதமர் மோடி, தேர்வு அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது, நம்பிக்கையுடன் இருப்பது, தினசரி வழக்கத்தை பின்பற்றுவது, சுயநம்பிக்கை வளர்ப்பது போன்ற நடைமுறை ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆழமான வழிகாட்டுதலை அளித்தார். மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள, பிரதமர் அவர்களுக்கு ஆறுதலும் ஊக்கமும் அளித்தார்.

மாணவர்கள் மொபைல் போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்று வலியுறுத்தினார் பிரதமர். சில குழந்தைகள் உணவு உண்ணும்போதுகூட மொபைலைப் பிரிக்க முடியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "இது தொழில்நுட்பத்திற்கு அடிமையாகியிருப்பதற்கான அறிகுறி. நீங்கள் தொழில்நுட்பத்தின் அடிமைகளாக மாறிவிடக் கூடாது. அதற்கு எதிராக உறுதியான முடிவெடுங்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

அதேநேரம், தொழில்நுட்பம் ஒரு ஆசீர்வாதம் என்றும், அதைப் பயன்படுத்தி தங்கள் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய தொழில்நுட்பங்களை பார்த்து பயப்பட வேண்டாம் என்று கூறிய மோடி, "AI-ஐ பயன்படுத்தி உங்கள் ஞானத்தையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் திறன்களை மேம்படுத்தும் கருவியாக இருக்க வேண்டும், உங்கள் இடத்தைப் பிடிக்கும் எதிரியாக அல்ல" என்று விளக்கினார்.

ஒரு மாணவர் AI மூலம் வேலைகள் பறிபோகும் அச்சத்தை வெளிப்படுத்தியபோது, பிரதமர் அதை ஒரு சாதாரண மாற்றமாகக் கருதி, தொழில்நுட்பத்துடன் இணைந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். "தொழில்நுட்பத்தை மதிப்பு சேர்க்கும் கருவியாகப் பயன்படுத்துங்கள், படிப்பிற்கு மாற்றாக அல்ல. உதாரணமாக, சிறந்த புத்தகங்களைத் தேட உதவும், ஆனால் புத்தகங்களைப் படிக்கும் வேலையை அது செய்ய வேண்டாம்" என்று எடுத்துக்காட்டினார்.

மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது விவேகத்துடன் இருக்க வேண்டும், தீர்மானங்கள் எடுக்கும் திறனை இழக்கக் கூடாது என்றும் கூறினார். இதன்மூலம் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே கட்டுப்படுத்த வேண்டும் என்ற செய்தியை வழங்கினார். தேர்வுகளில் சிறப்பாக செயல்பட முந்தைய வினாத்தாள்களை பயிற்சி செய்யவும், போதுமான தூக்கம் பெறவும் அவர் பரிந்துரைத்தார். 

அதுமட்டுமின்றி சுய போட்டியை வலியுறுத்திய பிரதமர், "மற்றவர்களுடன் போட்டியிடுவதை விட, தன்னுடனே போட்டியிடுங்கள். தினசரி முன்னேற்றம் தான் உண்மையான வெற்றி" என்று கூறினார். ஒழுக்கம், ஆரோக்கியம், தலைமைத்துவம், பெற்றோர்-ஆசிரியர்களின் பங்கு ஆகியவை குறித்தும் விரிவாக பேசினார். ஸ்டார்ட்அப், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விக்சித் பாரத் 2047 என்ற கனவு ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பை பாராட்டினார்.

இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தேர்வு மன அழுத்தம், திறன் மேம்பாடு, வாழ்க்கைத் திறன்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பிரதமர் வழிகாட்டியது குறிப்பிடத்தக்கது. பரீட்சா பே சர்ச்சா நிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் முயற்சியை பிரதமர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!! தைப்பூசத்திற்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share