ஜிஎஸ்டியில் 12%, 28% வரி விகிதங்கள் நீக்கம்.. நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்..!!
ஜிஎஸ்டியில் 12%, 28% வரி விகிதங்களை நீக்க நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாலும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமைப்பில் முக்கியமான சீரமைப்பு முயற்சியாக, 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்குவதற்கு மத்திய அரசின் முன்மொழிவை மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழு (GoM) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு இன்று நடைபெற்ற முக்கியமான கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதன்படி, தற்போதைய நான்கு வரி விகிதங்களான 5%, 12%, 18% மற்றும் 28% ஆகியவை இரண்டு விகிதங்களாக, அதாவது 5% மற்றும் 18% ஆக குறைக்கப்படும். இந்த மாற்றத்தின் மூலம் வரி அமைப்பு எளிமையாக்கப்பட்டு, வரி இணக்கம் மேம்படுத்தப்படும் என மத்திய அரசு நம்புகிறது.
இதையும் படிங்க: கார், பைக் வாங்கப்போறீங்களா? - மோடி கொடுக்கப் போகும் ஜாக்பாட் பரிசை மிஸ் பண்ணிடாதீங்க...!
நாட்டின் 79வது சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி, வரவிருக்கும் தீபாவளிக்கு முன் ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவைகள் வரி) சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். இந்த "அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி" சீர்திருத்தங்கள், பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை மக்கள், விவசாயிகள், சிறு மற்றும் பெரிய வணிகர்களுக்கு பயனளிக்கும் என அவர் தெரிவித்தார்.
2017ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, இந்தியாவின் மறைமுக வரி அமைப்பை ஒருங்கிணைத்து, "ஒரே நாடு, ஒரே வரி" என்ற கொள்கையை நிறுவியது. இருப்பினும், நான்கு வரி அடுக்குகள் (5%, 12%, 18%, 28%) காரணமாக சிக்கல்கள் எழுந்தன. இதனை எளிமையாக்குவதற்காக, மத்திய அரசு 12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்கி, 5% மற்றும் 18% என்ற இரு அடுக்கு முறையை முன்மொழிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், செப்டம்பர் 2025-ல் நடைபெறவுள்ள கூட்டத்தில் இந்த பரிந்துரைகளை இறுதி செய்யும்.
இந்த சீரமைப்பின் மூலம், 12% விகிதத்தில் உள்ள 99% பொருட்கள் 5% விகிதத்திற்கும், 28% விகிதத்தில் உள்ள 90% பொருட்கள் 18% விகிதத்திற்கும் மாற்றப்படும். மேலும் இந்த சீர்திருத்தத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிலையில், புகையிலை, பான்மசாலா போன்ற "பாவ பொருட்களுக்கு 40% சிறப்பு வரி விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி அதிநவீன சொகுசு கார்களுக்கு 40 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் பொது மக்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கத்திற்கும், சிறு தொழில்களுக்கு பயனளிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இருப்பினும், மேற்கு வங்க நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா, வருவாய் இழப்பு குறித்து மாநிலங்களுக்கு இழப்பீடு தேவை என்று வலியுறுத்தினார். இந்த சீரமைப்பு, நுகர்வை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தீபாவளி சர்ப்ரைஸ்... GST வரி விதிப்பில் மாற்றம்.. எந்தெந்த பொருட்களுக்கு விலை குறையும்?