பிரதமரின் தீபாவளி பரிசு! GST சீர்திருத்தத்தை புகழ்ந்து தள்ளிய நயினார் நாகேந்திரன்
மோடி அரசின் தீபாவளி பரிசுக்கு மிக்க நன்றி என ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தற்போதைய ஜிஎஸ்டி அமைப்பில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு முக்கிய வரி அடுக்குகள் உள்ளன. இவை மிகவும் சிக்கலானவை எனக் கருதப்பட்டு, புதிய சீர்திருத்தங்களின் மூலம் இரண்டு முக்கிய அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட உள்ளன. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் 2.0-ஐ அறிமுகப்படுத்திய பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இரண்டு அடுக்கு அமைப்பை அறிமுகப்படுத்துவது என்பது நமது பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்பு உருவாக்குவதிலும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்றும், மேலும், சிறு-குறு தொழில்வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க அளவில் பெரும் பயனளிக்கும். இந்த சீர்திருத்தங்கள் வணிகத்திற்கு மட்டுமன்றி மக்களுக்கும் பெரும் பயனளிப்பவை எனவும் கூறினார்.
மக்களின் செலவுத் திறனையும் சேமிப்புத் திறனையும் ஒருசேர ஊக்குவிக்கும் ஓர் அற்புத முயற்சி இது என்றும் தெரிவித்தார். கடந்த பட்ஜெட்டில் தெரிவித்தது போல மக்களின் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டியைக் கருணை உள்ளத்துடன் மத்திய அரசு முழுமையாக தள்ளுபடி செய்துள்ளது என்றும் ஒரே வருடத்தில் வருமான வரியில் மாபெரும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து நடுத்தர மக்களுக்கு வருமான வரிவிலக்கு அளித்ததோடு, ஜிஎஸ்டியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்து மக்களின் சேமிப்பைக் கணிசமாக ஒரு அரசு உயர்த்துவதென்பது உலக வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை என்றும் கூறினார் .
இதையும் படிங்க: இதுதான் காங்கிரஸ் கட்சி மாண்பா? ஒழுங்கா பிரதமர் கிட்ட மன்னிப்பு கேளுங்க... நயினார் வலியுறுத்தல்
அந்த வகையில் இன்றைய சமூகத்தை வலுப்படுத்தி, நாளைய வளமான பொருளாதாரத்திற்கு அடித்தளமிடும் இந்த ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள், இதுவரை எந்த அரசும் வழங்காத மக்களுக்கான தீபாவளி பரிசு தான் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விழிப்புடன் செயலாற்றுமா விடியல் அரசு? ஐயா வைகுண்டர் சர்ச்சை கேள்வியால் நயினார் கடும் கோபம்