வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது... காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது? பிரதமர் மோடி கிண்டல் பதிவு!
வாக்குச்சீட்டு முறையில் நடந்த எம்எல்சி தேர்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வென்றது என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) மாற்றாக வாக்குச்சீட்டு முறையிலேயே (Ballot Paper) தேர்தல்களை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், நான்கு முக்கிய மாநிலங்களில் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற சட்ட மேலவை (MLC) தேர்தல்களில் காங்கிரஸின் படுதோல்வியை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு பெரிய மாநிலங்களில் உள்ள 28 சட்ட மேலவை இடங்களுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. சட்ட மேலவைத் தேர்தல்கள் பொதுவாக வாக்குச்சீட்டு முறையிலேயே நடத்தப்படுவது வழக்கம்.
இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய 4 பெரிய மாநிலங்களில் உள்ள 28 தொகுதிகளுக்கான எம்.எல்.சி தேர்தல்கள்... இந்தத் தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்தியே நடத்தப்பட்டன... இதில் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களை வென்றது என்று நினைக்கிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பி, காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் முழுமையாகத் துடைத்தெறியப்பட்டதை கிண்டலாகச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: ஹாக்கி முதல் கிரிக்கெட் வரை..! ஆசிய போட்டிகளில் தூள் கிளப்பிய இந்தியா.. பிரதமர் மோடியை சந்தித்த வீரர், வீராங்கனைகள்..!!
தேர்தல்களில் தோல்வி அடையும்போதெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாகக் குற்றம்சாட்டி, பழைய வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்து வரும் வேளையில், அதே வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற 28 இடங்களிலும் காங்கிரஸ் பூஜ்ஜிய இடங்களைப் பெற்றுப் படுதோல்வி அடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமரின் இந்த விமர்சனப் பதிவு, தேசிய அளவில் பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!