மருந்தகங்களில் CCTV பொருத்த மத்திய அரசு பரிந்துரை!! காரணம் இதுதானாம்..!!
பின்னர் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தால் (டி.டி.ஏ.பி) பரிந்துரைக்கப்பட்டது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், 1945-ஆம் ஆண்டின் மருந்து விதிகளில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு அறிவிப்பு 2026 செப்டம்பர் 8 அன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தங்களின் முக்கிய நோக்கம், அட்டவணை எச், எச்.1 மற்றும் எக்ஸ் ஆகியவற்றில் உள்ள மருந்துகளை டாக்டரின் சரியான பரிந்துரைச்சீட்டு இல்லாமல் வாங்குவதையும், விற்பனை செய்வதையும் கடுமையாக தடுப்பதாகும்.
இந்த அட்டவணைகளில் உள்ள மருந்துகள் பெரும்பாலும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகள், மனநல மருந்துகள் மற்றும் அதிக அளவில் தவறாக பயன்படுத்தப்படக்கூடியவை ஆகும். இவற்றை பரிந்துரையின்றி விற்பதால் மருந்து எதிர்ப்புத் திறன், பக்க விளைவுகள் மற்றும் தவறான பயன்பாடு போன்ற பொது சுகாதார பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
இதைத் தடுக்க, மருந்துக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயமாக நிறுவ வேண்டும் என சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. வரைவு விதியின்படி, பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகளை விற்கும் அனைத்து உரிமம் பெற்ற மருந்துக் கடைகளிலும் (மொத்த விற்பனை தவிர) சி.சி.டி.வி கேமரா அமைப்பு நிறுவப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!
இந்த பதிவுகள் குறைந்தது மூன்று மாதங்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டும். இதன் மூலம், பரிந்துரை இல்லாமல் மருந்து விற்பனை நடந்தால், அதை எளிதில் கண்காணிக்கவும், சான்றுகளுடன் நடவடிக்கை எடுக்கவும் முடியும். இந்த முன்மொழிவு முதலில் மருந்து ஆலோசனைக் குழுவில் (டி.சி.சி) விவாதிக்கப்பட்டு, பின்னர் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தால் (டி.டி.ஏ.பி) பரிந்துரைக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், இது பொது சுகாதார ஒழுங்குமுறை மேற்பார்வையை வலுப்படுத்தி, மருந்து விநியோக சங்கிலியில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் என தெரிவித்தனர். தற்போது இது வரைவு நிலையிலேயே உள்ளது.
பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினரிடமிருந்து ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளை அமைச்சகம் வரவேற்றுள்ளது. இவை பரிசீலிக்கப்பட்ட பிறகுதான் இறுதி விதியாக அறிவிக்கப்படும். இந்த நடவடிக்கை, மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்வதற்கான முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: 20 மத்திய இணை அமைச்சர்களின் செயல்பாடுகள்: பிரதமர் மோடி 4 மணி நேரம் தீவிர ஆய்வு!