×
 

ட்ரம்ப் திட்டத்திற்கு கைமேல் பலன்! காசா மக்கள் நிம்மதி! பிரதமர் மோடி வரவேற்பு

அதிபர் டிரம்பின் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக நீடித்து, 70 ஆயிரம் உயிரிழப்புகளுக்கு காரணமான இஸ்ரேல்-ஹமாஸ் சண்டைக்கு முடிவுக் கட்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தின் முதல் கட்டமாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. 

இதன் மூலம், ஹமாஸ் கைது செய்த இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவர்; இஸ்ரேல் ராணுவம் காசாவிலிருந்து முழுமையாகத் திரும்பும். உலக நாடுகளின் மத்தியஸ்தத்தால் ஏற்பட்ட இந்த வரலாற்று ஒப்பந்தம், மத்திய கிழக்கில் நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதும், 251 பேர் கைது செய்யப்பட்டதும் இந்தச் சண்டையின் தொடக்கமாக அமைந்தது. பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசாவில் நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களால் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 

இதையும் படிங்க: போரை நிறுத்துங்க! இல்லையினா ரத்தக்களறி ஆகிரும்! ஹமாஸை எச்சரிக்கும் ட்ரம்ப்!

ஐ.நா., ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, அரபு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் அமைதி முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், இஸ்ரேல் "பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்" என வலியுறுத்தியது; ஹமாஸ் "தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே பேச்சுக்கு வரலாம்" என நிலைப்பாடு எடுத்தது.

இந்நிலையில், டிரம்ப் முன்வைத்த 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தை இஸ்ரேல் ஏற்றது, ஹமாஸ் மறுத்தது. "ஏற்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ரத்தக்களறி ஏற்படும்" என டிரம்ப் மிரட்டியதும், கத்தார், எகிப்து, துருக்கி நாடுகளின் மத்தியஸ்தத்தால் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. 

இதன் விளைவாக, எகிப்தின் சார்ம் எல்-ஷேக் நகரில் நடந்த மறைமுக பேச்சுகளில் முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டது. டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், "இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளனர். பிணைக் கைதிகள் விரைவில் விடுதலை ஆவர்கள்; இஸ்ரேல் ராணுவம் திரும்பும். இது நிரந்தர அமைதிக்கு வழி வகுக்கும். கத்தார், எகிப்து, துருக்கிக்கு வாழ்த்துக்கள்" என மகிழ்ச்சி தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இது சிறப்பான தலைமை. பிணைக் கைதிகளை வீடு கொண்டு வரும்" என உறுதியளித்தார். ஹமாஸ், "ஒப்பந்தத்தை இஸ்ரேல் முழுமையாக செயல்படுத்த வேண்டும்" என கூறியது. கத்தார், "அமைதிக்கு வழி பிறந்தது" என மகிழ்ச்சி தெரிவித்தது. ஐ.நா. செயலாளர் அன்டானியோ குட்டெரெஸ், "இது வரலாற்று தருணம்" என வரவேற்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளத்தில், "டிரம்பின் போர் நிறுத்த திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை வரவேற்கிறோம். நெதன்யாகுவின் தலைமை சிறப்பானது. பிணைக் கைதிகள் விடுதலை, காசா மக்களுக்கு உதவிகள், நிம்மதி தரும். நிலையான அமைதிக்கு வழி வகுக்கும்" என பதிவிட்டார்.

இந்த ஒப்பந்தம், காசாவின் மீட்பை எளிதாக்கும். ஆனால், இரு தரப்பும் ஒப்பந்தத்தை முழுமையாக நடப்பாற்ற வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்துகின்றன. இரண்டு ஆண்டுகள் சண்டைக்குப் பின், மத்திய கிழக்கில் அமைதியின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் மீது கைவைச்சா அவ்ளோ தான்!! அமெரிக்கா இறங்கி அடிக்கும்! ட்ரம்ப் வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share