ஹார்முஸ் நீரிணை எங்கள் வசம்! ஈரானை எச்சரித்து டொனால்ட் டிரம்ப் பதிவு!
ஹார்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், தங்களின் அனுமதியின்றி எந்தக் கப்பலும் அங்கு நுழையவோ வெளியேறவோ முடியாது என்றும் ட்ரம்ப் அறிவிப்பு.
சர்வதேச எரிசக்தி வர்த்தகத்தின் முக்கிய மையமான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது அமெரிக்கக் கடற்படையின் முழுமையானக் கட்டுப்பாட்டில் (Total Control) உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடன் ஒரு முறையான ஒப்பந்தம் எட்டப்படும் வரை, அமெரிக்காவின் அனுமதியின்றி எந்த ஒரு கப்பலும் அந்தப் பகுதிக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாது என அவர் எச்சரித்துள்ளார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது. ஹார்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்கக் கடற்படையின் அனுமதியின்றி ஒரு கப்பல் கூட அங்கே நகர முடியாது. ஈரான் ஒரு சரியான தீர்வுக்கு வரும் வரை இந்த நீரிணை "இறுக்கமாக சீல்" (Sealed up Tight) செய்யப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் டிரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஈரானின் அதிகாரப் படிநிலையில் (Power Hierarchy) தற்போது இரண்டு முக்கியப் பிரிவினருக்கு இடையே கடும் மோதல் நிலவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஈரானின் இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் குழப்பமான நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அவர்களை ஒரு ஒப்பந்தத்திற்குப் பணிய வைக்க அமெரிக்கா இந்தத் தடையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்! இந்தியா வந்துகொண்டிருந்த கப்பல் உள்பட 2 கப்பல்களை சிறைபிடித்தது ஈரான் !
பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டிரம்ப் இந்தத் தீவிரமான தடையை (Naval Blockade) அமல்படுத்தியுள்ளார். நீரிணையில் கண்ணிவெடிகளை (Mines) வைக்கும் எந்தவொரு சிறிய படகையும் சுட்டு வீழ்த்த அமெரிக்கக் கடற்படைக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளதுடன், தங்கள் மீதான தடையை நீக்காத வரை நீரிணையை முழுமையாகத் திறக்க மாட்டோம் என்றும் பிடிவாதம் காட்டி வருகிறது.
உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறும் இந்தப் பாதையை அமெரிக்கா தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் நிலவும் இந்த 'டைட்' ஆன நிலை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையை முடுக்கி விடுமா அல்லது ஒரு பெரிய நேரடிப் போருக்கு வழிவகுக்குமா என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணையில் 14 இந்திய கப்பல்கள் தவிப்பு! மத்திய அரசின் தீவிர ராஜதந்திர முயற்சிகள்!