பெற்றோர்களே கவனம்! 14 வயது மகள்களுக்கு இலவச HPV தடுப்பூசி – தமிழகத்திலும் தீவிரப்படுத்தப்படும் திட்டம்!!
புற்றுநோய்களைத் தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக, நாடு முழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
புதுடெல்லி: பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக, நாடு முழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை தற்போது 80 லட்சத்தை கடந்துள்ளது.
மனித பாப்பிலோமா வைரஸ் எனப்படும் HPV தொற்று, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, சிறுமிகளுக்கு இளம் வயதிலேயே HPV தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் உள்ள அரசு முதன்மை சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்ட மையங்களில் இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. திட்டத்தின் கீழ் ‘கார்டசில்-4’ தடுப்பூசி ஒற்றை டோஸாக செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாகும்.
இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்..! விறுவிறு ஏற்பாடுகள்... தீவிர வாகனச் சோதனை..!!
மத்திய அரசின் மதிப்பீட்டின்படி, இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 1.20 கோடி சிறுமிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஏற்கனவே 80 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
மாநில அளவில் உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகியவை தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 100 சதவீதம் எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பீகார், ஆந்திரப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமான இலக்கை எட்டியுள்ளன.
தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களும் 60 சதவீதத்துக்கும் மேல் இலக்கை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீதமுள்ள சிறுமிகளையும் திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு HPV தடுப்பூசி வழங்குவது தொடர்பான அரசு மருத்துவமனை அறிவிப்புகள் மற்றும் உள்ளூர் சுகாதாரத்துறை தகவல்களை கவனித்து, தகுதி மற்றும் தடுப்பூசி வழங்கும் நடைமுறைகளை உறுதி செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் பரபரப்பு!! இரு தொகுதிகள்.. தவெகவின் இரு வேட்பாளர்கள்..!! விஜய்யின் முடிவு என்ன?