×
 

ரெடியா இருந்துக்குங்க! வெடிகுண்டு வீசப்போறேன்!! ராகுல்காந்தி பேச்சால் பீகாரில் வெடித்தது சர்ச்சை!!

பா.ஜ.,வினர் தயாராகிக் கொள்ளுங்கள், ஹைட்ரஜன் குண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் வீசும் ஹைட்ரஜன் குண்டுக்கு பின் தன் முகத்தைக் கூட காட்ட முடியாத நிலைக்கு நரேந்திர மோடி தள்ளப்படுவார் என ராகுல் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

பீஹாரின் தலைநகர் பாட்னாவில் நடந்த ‘வாக்காளர் உரிமை பேரணி’யின் நிறைவு நிகழ்ச்சியில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

‘ஓட்டு திருட்டு’ மற்றும் ‘நாற்காலி திருட்டு’ குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பாஜக அரசை கடுமையாக விமர்சித்த ராகுல், தனது உரையில் ‘ஹைட்ரஜன் குண்டு’ குறித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் புயலை கிளப்பியுள்ளது. இந்த பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்து, ராகுலின் பேச்சு தரமற்றது என்று விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி, பீஹாரில் நடத்திய பேரணியில், தேர்தல் முறைகேடுகள் குறித்து உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காகவே இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார். “ஓட்டு திருட்டு, நாற்காலி திருட்டு என எங்களது கோஷங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த கோஷங்கள் சீனாவையும் எட்டிவிட்டன,” என்று கூறி, பாஜகவினரை எச்சரித்தார். 

இதையும் படிங்க: அரசியலமைப்பு புக் கையில வச்சிருந்தா பத்தாது படிக்கணும்! ராகுல் காந்திக்கு அமித்ஷா பதிலடி

மேலும், “பாஜகவினர் தயாராக இருங்கள், ஹைட்ரஜன் குண்டு உங்களை நோக்கி வருகிறது. இதற்கு பின் பிரதமர் நரேந்திர மோடி தன் முகத்தைக் கூட காட்ட முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்,” என்று ஆவேசமாக பேசினார். இந்த பேச்சு, தேர்தல் முறைகேடு குறித்து ராகுல் தொடர்ந்து எழுப்பி வரும் குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

ராகுலின் இந்த உரை, பாஜகவினரை கடுப்பேற்றியுள்ளது. பாஜக மூத்த எம்.பி. ரவிசங்கர் பிரசாத், டெல்லியில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “ராகுலின் பேச்சு கேட்கும்போது, அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை. அவரது பேச்சை புரிந்துகொள்ளவே பல மணி நேரம் ஆகிறது. 

அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு போன்றவை தேர்தலுடன் எப்படி தொடர்புபடுத்தப்பட முடியும்? இது முற்றிலும் கண்டனத்திற்குரியது,” என்று கூறினார். மேலும், “ராகுல் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வதோடு, நாட்டு வாக்காளர்களையும் அவமானப்படுத்துகிறார்,” என்று கடுமையாக விமர்சித்தார்.

ராகுலின் இந்த பேச்சு, பீஹாரில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் அரசியல் விவாதங்களை தூண்டியுள்ளது. காங்கிரஸ் ஆதரவாளர்கள், இது பாஜகவின் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான துணிச்சலான நிலைப்பாடு என்று பாராட்ட, பாஜகவினர் இதை மலிவான அரசியல் நாடகம் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில், ‘ஹைட்ரஜன் குண்டு’ என்ற வார்த்தை பரவலாக பகிரப்பட்டு, இந்த விவகாரம் மேலும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதையும் படிங்க: மோடி ஜி பிரஸ்மீட்டுக்கு ரெடியா? ராகுல் வீடியோவை பகிர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share