×
 

விட்றா நேரா வண்டிய சீனாவுக்கு.. இண்டிகோ நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!!

இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவைகள் அக்டோபர் 26ம் தேதி முதல் தொடங்குவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவைகள், வரும் அக்டோபர் 26ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளன. 

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்சோவுக்கு தினசரி நேரடி விமானங்களை இயக்கத் தொடங்கும் என அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, டெல்லியிலிருந்து குவாங்சோவுக்கு விமான சேவையும் அனுமதி கிடைத்தவுடன் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவைகள் இரு நகரங்களுக்கும் தினமும் இரு முறை இயக்கப்படும். 

இதையும் படிங்க: போடு.. தகிட.. தகிட..! குஷியில் டெலிவரி ஊழியர்கள்..!! இன்ப அதிர்ச்சி கொடுத்த சோமாட்டோ நிறுவனம்..!!

இந்த அறிவிப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் ஏற்பட்டிருக்கும் படிப்படியான இயல்பு நிலைக்கு சான்றாக அமைகிறது. 2020ஆம் ஆண்டு எல்லை மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன. பயணிகள் ஹாங்காங் அல்லது சிங்கப்பூர் போன்ற இடைநிலை வழிகளைப் பயன்படுத்தி செல்ல வேண்டியிருந்தது. இப்போது, இரு நாடுகளின் விமான போக்குவரத்து அதிகாரிகளிடையே நடைபெற்ற தொழில்நுட்ப விவாதங்களுக்குப் பிறகு, குளிர்கால அட்டவணைக்கு ஏற்ப அக்டோபர் இறுதியில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இரு நாடுகளின் நியமிக்கப்பட்ட விமான நிறுவனங்களின் வணிக முடிவுகளுக்கும், செயல்பாட்டு தேவைகளுக்கும் உட்பட்டு, இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவைகள் அக்டோபர் இறுதியில் மீண்டும் தொடங்கப்படும். இது மக்களுக்கிடையேயான தொடர்புகளை மேம்படுத்தி, இருதரப்பு பரிமாற்றங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்" என்றார்.

இண்டிகோ தவிர, டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனமும் டெல்லியிலிருந்து ஷாங்காய்க்கு விமான சேவைகளை ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளது. சீனாவின் ஏர் சைனா, சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், சைனா சதர்ன் ஏர்லைன்ஸ், ஷான்டாங் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்களும் டெல்லி விமான நிலையத்திற்கு சேவைகளை மீண்டும் தொடங்க ஆர்வம் காட்டியுள்ளன.

இந்த வளர்ச்சி, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். அப்போது, வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது, இந்தியாவின் 99.2 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையை சரிசெய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விமான சேவை மீட்டெடுப்பு, பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரு நாடுகளுக்கும் இடையேயான விமான உடன்படிக்கையை திருத்துவது குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது, எதிர்காலத்தில் மேலும் சேவைகளை விரிவுபடுத்த உதவும். பயணிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என்கின்றனர் வல்லுநர்கள்.

இதையும் படிங்க: 41 பேர் உயிரிழப்புக்கு திமுக அரசுதான் காரணம்.. தருமபுரி பிரச்சாரத்தில் விளாசிய எடப்பாடி பழனிசாமி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share