பலமுறை அடிவாங்கியும் திருந்தாத பாக்., ஐநாவில் உலக நாடுகள் பார்க்க இந்தியா தரமான சம்பவம்!
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாக இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதெல்லாம் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என்று பாகிஸ்தான் பிரதிநிதி பேசினார்.
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் “அமைதிக்கான தலைமைத்துவம்” என்ற தலைப்பில் நடந்த திறந்த விவாதத்தில், பாகிஸ்தான் தேவையின்றி காஷ்மீர் விவகாரத்தையும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இழுத்தது. இதற்கு இந்தியா உலக நாடுகள் முன்னிலையில் கடுமையான பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் பிரதிநிதி ஆசிம் இஃப்திகார் அகமது பேசுகையில், தெற்காசியாவில் அமைதி வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புவதாகக் கூறினார். ஆனால் அமைதி ஒருதலைப்பட்சமாக இருக்க முடியாது என்றார். காஷ்மீர் விவகாரம் ஐ.நா.வின் பழமையான தீர்க்கப்படாத சர்ச்சை என்றும், காஷ்மீர் மக்கள் விருப்பப்படி நியாயமான தீர்வு வேண்டும் என்றும் கூறினார். இந்தியா அதைத் தடுப்பதாகவும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைத்ததாகவும் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி, பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் மற்றும் பயங்கரவாத ஆதரவை கடுமையாகச் சாடினார். பாகிஸ்தான் தனது மக்களின் விருப்பத்தை மதிப்பதில்லை என்று கூறிய அவர், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை ஊழல் வழக்கில் சிறையில் அடைத்தது, அவரது கட்சியை முடக்கியது, ஆடியாலா சிறையில் சித்திரவதை செய்வது போன்றவற்றைச் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: ஆப்கானுக்கு ஆதரவாக ஐ.நா சபையில் குரல் கொடுத்த இந்தியா!! பாக்., மீது பயங்கர பாய்ச்சல்!!
மேலும், 27-வது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் ராணுவத்துக்கு அதிகாரம் கொடுத்து, ராணுவத் தளபதி அசிம் முனீருக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளித்ததாகவும் குற்றம்சாட்டினார். இதை “மக்கள் விருப்பத்தை மதிக்கும் தனித்துவமான வழி” என்று கிண்டலடித்தார்.
காஷ்மீர் குறித்து பர்வதனேனி கூறுகையில், ஜம்மு-காஷ்மீரும் லடாக்கும் எப்போதும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகள் என்றார். அவை இருந்தன, இருக்கின்றன, எப்போதும் இருக்கும் என்று உறுதிப்படுத்தினார். பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் தேவையற்றவை என்றும், இந்தியாவுக்கு தீங்கு விளைவிப்பதிலேயே பாகிஸ்தான் கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து, 65 ஆண்டுகளுக்கு முன்பு நல்லெண்ணத்துடன் கையெழுத்திட்டதாகவும், ஆனால் பாகிஸ்தான் மூன்று போர்களையும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்களையும் நடத்தியதாகவும் கூறினார். கடந்த நாற்பது ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தில் பல்லாயிரக்கணக்கான இந்திய உயிர்கள் பலியானதாகவும் சுட்டிக்காட்டினார்.
சமீபத்தில் ஏப்ரல் 2025-ல் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி சிவிலியன்கள் மத அடிப்படையில் கொல்லப்பட்டதை எடுத்துக்காட்டாகக் கூறினார். இத்தகைய சூழலிலேயே ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது என்றார். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாத ஆதரவை முழுமையாக கைவிடும் வரை ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்றும், பயங்கரவாதத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்தியாவின் இந்த கடும் பதிலடி உலக அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தியுள்ளது என்று கருதப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிடாதீங்க!! எங்களுக்கு விதிகள், நெறிமுறைகள் இருக்கு! ஜெய்சங்கர் ஆவேசம்!