பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய இந்தியா... ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது இடம்!!
மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியலில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஐஎம்எப் பொருளாதார ஆய்வறிக்கையில் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா நான்காவது இடத்தை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-26-ம் நிதியாண்டில் 4 ஆயிரத்து 187.017 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவான 4 ஆயிரத்து 186.431 பில்லியன் டாலரை விட சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 2024 வரையில் சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 4ஆவது இடத்துக்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாப் லிஸ்டில் இந்தியா... சினிமா தயாரிப்பில் முன்னோடி.. பிரதமர் மோடி பெருமிதம்..!
இதேபோல் வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, ஜெர்மனியின் பொருளாதாரம் 5 ஆயிரத்து 251.928 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில் இந்தியாவின் ஜிடிபி அதனை மிஞ்சி இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது 5 ஆயிரத்து 584.476 பில்லியன் டாலாராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்ட நாடாக வரும் 2027 ஆம் ஆண்டில் உருவெடுக்கும் என்றும் அப்போது இந்தியாவின் ஜிடிபி 5 ஆயிரத்து 069.47 பில்லியன் டாலராக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியலில் நடப்பாண்டில் எப்போதும்போல் முதல் இரண்டு இடங்களை அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை தக்கவைத்துள்ளது. அவர்கள் இந்த தரவரிசையை இந்த தசாப்தம் முழுவதும் தக்கவைத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி..! கடனுக்கான வட்டிவீதம் தொடர்ந்து 2வது முறையாகக் குறைத்தது ரிசர்வ் வங்கி..!