சீனா உட்பட அனைத்து உலக நாடுகளுடனும் வர்த்தகம் அவசியம்! வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
சீனா உள்ளிட்ட உலக நாடுகளுடன் இந்தியா வர்த்தகம் செய்துதான் ஆக வேண்டும் என்றும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பொருளாதாரச் சூழலில் இந்தியா தனது தொழில்துறை மற்றும் உள்நாட்டு உற்பத்தித் திறன்களைப் பலப்படுத்திக் கொள்ளும் அதே வேளையில், சீனா உட்பட உலகின் அனைத்து நாடுகளுடனும் தொடர்ந்து வர்த்தகம் செய்துதான் ஆக வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தி எகனாமிக் டைம்ஸ் குளோபல் லீடர்ஸ் ஃபோரம் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அவர், சர்வதேச அளவில் வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழல் மற்றும் பொருளாதார நிலைப்பாடுகள் குறித்து விரிவான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
நாம் உலகம் முழுவதுடனும் வர்த்தகம் செய்ய வேண்டும்; அதில் சீனாவும் அடங்கும். ஆனால் சர்வதேச சந்தையில் நாம் முழு நம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும் வணிகத் தொடர்புகளை மேற்கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும் என அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சீனா-துருக்கியுடன் கைகோர்ப்பு! அடுத்தடுத்து பாக்., வந்த ராணுவ விமானங்கள்! இந்தியாவுக்கு புது தலைவலி!
சீனாவுடனான வர்த்தக உறவுகள் குறித்துத் தொடர்ந்து பேசிய அமைச்சர், சீனா பல தசாப்தங்களுக்கு முன்பே பெரிய அளவிலான தொழில்மயமாக்கலை அடைந்து உற்பத்தித் துறையில் முன்னிலை பெற்றுள்ளது; இந்தியா அந்த இடைவெளியை நிரப்பித் தனது உற்பத்தித் திறனைப் பலமடங்கு பெருக்க வேண்டும்.
ஒரு வலுவான, தொழில்மயமான, அதிக உற்பத்தித் திறன் கொண்ட தற்சார்பு பாரதத்தால் மட்டுமே சீனா உள்ளிட்ட உலக வல்லரசு நாடுகளுக்கு இணையான ஆரோக்கியமான போட்டியை எதிர்கொள்ள முடியும். சீனாவுடனான பொருளாதாரத் தொடர்புகளின் இறுதி இலக்கே நமது உள்நாட்டுப் பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதும், நமது திறன்களை மேம்படுத்துவதும்தான் எனத் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: சீன பொருளாதாரத்தின் சிற்பி மறைவு! முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!