இந்தியாவை விளையாட்டு துறையின் உலக மையமாக மாற்றுவோம்! அகமதாபாத் விழாவில் அமித் ஷா உறுதி!
மோடி தலைமையில் இந்தியாவை விளையாட்டுகளின் உலகளாவிய மையமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக 'வேர்ல்ட் ஆர்ச்சரி பாரா சீரிஸ்' தொடக்கத்தில் அமித் ஷா கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்தியாவை விளையாட்டுத் துறையில் உலகளாவிய வல்லரசு மையமாக மாற்றும் மாபெரும் இலக்கை நோக்கி மத்திய அரசு திட்டமிட்டு முன்னேறி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச அளவில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக நடத்தப்படும் 'உலக வில்வித்தை பாரா தொடர் 2026' (World Archery Para Series 2026) போட்டியின் தொடக்க விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட விழாவில் காணொளிக் காட்சி வாயிலாகப் பங்கேற்றுப் போட்டிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளையாட்டுத் துறையில் இந்தியா முன்னெடுத்து வரும் கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.
விழாவில் பேசிய அவர், ஒரு முழுமையான தொலைநோக்குப் பார்வையுடனும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழும், இந்தியாவை விளையாட்டுத் துறையில் உலகளாவிய முதன்மை மையமாக நிலைநிறுத்த நாங்கள் சீரிய முறையில் முன்னேறி வருகிறோம்.
இதையும் படிங்க: அமித் ஷாவுக்கு வீட்டு மசாலா பொடி.. மத்திய அரசை விமர்சிக்கக் கூடாதாம்! விஜய்யின் அதிரடி ஆர்டர்!!
சர்வதேசப் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்வது மட்டுமே எங்களின் குறிக்கோள் அல்ல; அதையும் தாண்டி ஒலிம்பிக் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் மற்றும் காவல்துறை விளையாட்டுப் போட்டிகள் என அனைத்து சர்வதேசக் களங்களிலும் இடம்பெறும் ஒவ்வொரு விளையாட்டையும் அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்துவதே எங்களின் முதன்மையான நோக்கமாகும் என்று தெரிவித்தார்.
மேலும் நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் குறித்துக் குறிப்பிட்ட அவர், அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் சர்வதேசத் தரம் வாய்ந்த அதிநவீனப் பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகள் அகமதாபாத், குஜராத் அல்லது இந்தியாவோடு மட்டும் சுருங்கிவிடப் போவதில்லை. சர்வதேசத் தரத்திற்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டமைப்பு வசதிகள், இந்திய வீரர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சர்வதேச வீரர்களுக்கான ஒரு மகத்தான உலகளாவிய பயிற்சி மையமாக உருவெடுக்கப் போகின்றன.
அதுமட்டுமின்றி, மிக விரைவில் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கான அதிநவீன மருத்துவ அறிவியல் துறையிலும் (Medical Science of Sports Injuries) இந்தியா உலகளாவிய தலைமையாக உருவெடுக்கும். குறிப்பாக, விளையாட்டு வீரர்கள் காயமடையும் போது அளிக்கப்படும் நவீன சிகிச்சை மற்றும் மீட்பு மருத்துவத்தில் குஜராத் மாநிலம் ஒரு முதன்மை மையமாக மிளிரத் தயாராகி வருகிறது. இந்த சர்வதேச வில்வித்தை போட்டிகளில் பங்கேற்க வருகை தந்துள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் அகமதாபாத்திற்கு மனதார வரவேற்கிறேன் என்று உற்சாகத்துடன் பேசினார்.
இதையும் படிங்க: அமித் ஷா உடனே பதவி விலக வேண்டும்! ஜந்தர் மந்தர் விவகாரத்தில் ராகுல் காந்தி ஆவேசம்!