×
 

சக்சஸ்!! இந்தியா - நியூசிலாந்து ஒப்பந்தம் இடையிலான பேச்சு வெற்றி! ஏற்றுமதியில் அசத்தும் பயன்கள்! லிஸ்ட் இதோ!

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளதாக இந்தியாவும், நியூசிலாந்தும் அறிவித்துள்ளன. இரு நாட்டு பிரதமர்களும் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடி, இதை உறுதி செய்தனர்.

புதுடெல்லி: இந்தியாவும் நியூசிலாந்தும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் நேற்று (டிசம்பர் 22) தொலைபேசி வாயிலாக உரையாடி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கும் என்பதோடு, முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் அனைத்து ஏற்றுமதி பொருட்களுக்கும் நியூசிலாந்து சுங்கவரி விலக்கு அளிக்கும். அதாவது, இந்தியப் பொருட்கள் நியூசிலாந்து சந்தையில் முழுமையாக வரி இல்லாமல் நுழைய முடியும். இது இந்தியாவின் ஜவுளி, காலணிகள், கடல் உணவு, பொறியியல் பொருட்கள், வாகனங்கள், விமான எரிபொருள், பெட்ரோலியப் பொருட்கள் போன்ற துறைகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். 

இதையும் படிங்க: பிரதமர் மோடியுடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சு!! போனிலே முடிந்த முக்கியமான டீல்! அதிகரிக்கும் ஏற்றுமதி!

அதேநேரம், நியூசிலாந்தின் 95 சதவீத ஏற்றுமதி பொருட்களுக்கு இந்தியா சுங்கவரி விலக்கு வழங்கும். இதனால் நியூசிலாந்தின் பழங்கள், மரச்சாமான்கள், நிலக்கரி, மதுபானம் போன்ற பொருட்கள் இந்திய சந்தையில் எளிதாகக் கிடைக்கும்.

தற்போது இந்தியப் பொருட்களுக்கு நியூசிலாந்தில் சராசரி சுங்கவரி 2.3 சதவீதமாகவும், நியூசிலாந்து பொருட்களுக்கு இந்தியாவில் 17.8 சதவீதமாகவும் உள்ளது. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால் இந்த வரிகள் பெரிதும் குறையும் அல்லது முழுமையாக நீக்கப்படும். 

குறிப்பாக, இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறை, தகவல் தொழில்நுட்பம், கல்வி, நிதி சேவைகள், சுற்றுலா போன்ற சேவைத் துறைகளும் பயனடையும். நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர் (சுமார் 1.80 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான தற்போதைய வர்த்தகம் 2024-25ஆம் ஆண்டில் சுமார் 21,600 கோடி ரூபாயாக உள்ளது. இதில் சரக்கு வர்த்தகம் மட்டும் 11,700 கோடி ரூபாய். இந்த ஒப்பந்தத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வர்த்தகம் இரட்டிப்பாகி 45,000 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், இந்திய தொழில் நிபுணர்களுக்கு நியூசிலாந்தில் தற்காலிக விசா, மாணவர்களுக்கு படிப்புக்குப் பின் வேலை வாய்ப்பு, யோகா மற்றும் ஆயுஷ் பயிற்சியாளர்கள், சமையல் நிபுணர்கள், இசை ஆசிரியர்களுக்கு சிறப்பு விசா வசதிகள் கிடைக்கும்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெறும் ஒன்பது மாதங்களில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. இது வளர்ந்த நாடு ஒன்றுடன் இந்தியா மேற்கொண்ட வேகமான வர்த்தக ஒப்பந்தம் ஆகும்.

பேச்சுவார்த்தைகள் 2025 மார்ச் மாதம் நியூசிலாந்து பிரதமர் லக்ஸன் இந்தியா வருகையின் போது தொடங்கின. அதன்பிறகு டில்லி, குயின்ஸ்டவுன், ஆக்லாந்து போன்ற இடங்களில் பல சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றன. அடுத்த மூன்று மாதங்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகி, 2026 ஜூன் மாதத்துக்குப் பிறகு முழுமையாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் உழைக்கும் தொழிலாளர்கள், சிறு நிறுவனங்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு இந்த ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளைத் திறக்கும். பால் பொருட்கள், சர்க்கரை, காய்கறிகள் போன்ற உணர்திறன் துறைகளை இந்தியா பாதுகாத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியுடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சு!! போனிலே முடிந்த முக்கியமான டீல்! அதிகரிக்கும் ஏற்றுமதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share