ஏஐ (AI) வீடியோக்களுக்கு இனி கட்டாய லேபிள்! சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எவை என்பதைப் பயனர்கள் எளிதில் கண்டறியும் வகையில், அவற்றுக்குக் கட்டாயமாக லேபிள்கள் இட வேண்டும் என மத்திய அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது.
இந்தியாவில் பெருகி வரும் டீப்ஃபேக் (Deepfake) மற்றும் தவறானத் தகவல்களைத் தடுக்கும் பொருட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை (AI Generated Content) ஒழுங்குபடுத்தும் புதிய தகவல் தொழில்நுட்பத் திருத்த விதிகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் ஏதேனும் ஒரு புகைப்படம், வீடியோ அல்லது ஆடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தால், அதனைப் பதிவேற்றும் பயனர்கள் அதுகுறித்தத் தகவலைத் தளத்திடம் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பயனர்களிடம் இருந்து உறுதியை பெறுவதற்கான வசதியைச் சமூக ஊடக நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். மேலும், பயனர்கள் அளிக்கும் தகவல் உண்மையானதா என்பதைச் சரிபார்க்கத் தகுந்தத் தொழில்நுட்பக் கருவிகளை அந்த நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும்.
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களில் 'இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது' என்ற முத்திரை தெளிவாகவும், வெளிப்படையாகவும் தெரிய வேண்டும். ஒருமுறை இடப்பட்ட அந்த லேபிள்களை அல்லது மெட்டா டேட்டாவை நீக்கவோ அல்லது மறைக்கவோ பயனர்களுக்குத் தளங்கள் அனுமதிக்கக் கூடாது.
இதையும் படிங்க: “திமுக ஒரு நிர்வாகத் திறனற்ற அரசு!” திருச்சியில் எடப்பாடி பழனிசாமி சரமாரி புகார்!
அரசு அல்லது நீதிமன்றத்தால் சட்டவிரோதமான டீப்ஃபேக் வீடியோக்கள் எனச் சுட்டிக்காட்டப்பட்டால், அதனைச் சமூக ஊடக நிறுவனங்கள் 3 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் சட்ட விளைவுகள் குறித்து, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பயனர்களுக்குத் தளங்கள் விழிப்புணர்வு செய்திகளை அனுப்ப வேண்டும்.
இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, ஜனநாயக நாட்டில் உண்மையானத் தகவல்கள் எவை, செயற்கையானவை எவை என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. அந்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே இந்த விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். கூகுள், மெட்டா மற்றும் எக்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த விதிகளைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் அந்தத் தளங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்குக!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!