பெருமைக்குரிய மைல்கல்..!! இந்தியாவின் ராணுவ பலம்: உலக அளவில் 5-வது இடம்..!!
சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லைப் பதற்றங்கள் இந்தியாவின் பாதுகாப்பு செலவை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான உலக ராணுவச் செலவு அறிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. உலக நாடுகளின் மொத்த ராணுவச் செலவு 2,887 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.9 சதவீதம் அதிகரிப்பு ஆகும். இது 11-வது ஆண்டாக தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகிறது.
அமெரிக்கா (954 பில்லியன் டாலர்), சீனா (336 பில்லியன்), ரஷியா (190 பில்லியன்), ஜெர்மனி (114 பில்லியன்) ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் ராணுவச் செலவு 92.1 பில்லியன் டாலராக உயர்ந்து, உலக மொத்தத்தில் 3.2 சதவீத பங்கை வகிக்கிறது. முதல் ஐந்து நாடுகளின் மொத்த செலவு 1,686 பில்லியன் டாலராக உள்ளது. இது உலக ராணுவச் செலவில் 58 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் செலவு 8.9 சதவீதம் அதிகரித்துள்ளது. மே 2025-ல் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட பதற்றம், குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ஆயுதப் படைகள் போர் தயார் நிலையை வலுப்படுத்த அவசர ஆயுதக் கொள்முதல்களை மேற்கொண்டன. இது விமானப் படைக்கான மூலதனச் செலவை கணிசமாக உயர்த்தியது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் தொடர் பதற்றம் இந்தியாவின் பாதுகாப்பு செலவை தொடர்ந்து அதிகரிக்கச் செய்கிறது.
இதையும் படிங்க: ஈரானுக்கு விமான பயணம்: இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை!
2026-27 மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு சாதனை அளவான ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.2.19 லட்சம் கோடி புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட நவீனப்படுத்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும். ஆயுத இறக்குமதியில் இந்தியா இன்னும் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
2021-25 காலகட்டத்தில் உலக ஆயுத இறக்குமதியில் 8.2 சதவீத பங்குடன் இந்தியா தனது இடத்தைத் தக்க வைத்துள்ளது. இருப்பினும், 2016-20 உடன் ஒப்பிடுகையில் இறக்குமதி 4 சதவீதம் குறைந்துள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியை (Make in India) ஊக்குவிப்பதன் விளைவாகும்.ரஷியாவின் மீதான சார்பு கணிசமாகக் குறைந்துள்ளது. 2011-15-ல் 70 சதவீதமாக இருந்த ரஷிய ஆயுதங்களின் பங்கு, 2021-25-ல் 40 சதவீதமாகக் குறைந்தது.
பிரான்ஸ் (29%), இஸ்ரேல் (15%) மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முக்கிய சப்ளையர்களாக உருவெடுத்துள்ளன. இந்த மாற்றம் இந்தியாவின் உத்தியோகபூர்வமான விவேகமான கொள்கையைப் பிரதிபலிக்கிறது. உலகளாவிய பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா தனது பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் நவீனப்படுத்தல் மற்றும் தற்சார்பு நோக்கங்களை வேகப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: இந்தியா - நியூசிலாந்து இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்! ஏப்ரல் 27-ல் கையெழுத்தாகிறது தடையற்ற வர்த்தகம்!