ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!
எந்த நாட்டிற்கும் கருத்துச் சொல்ல உரிமை இல்லை என ஜம்மு காஷ்மீர் குறித்த சீனா, பாகிஸ்தானின் கருத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் தொடர்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியிட்ட கருத்துகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்த நாட்டிற்கும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்கும் உரிமை இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியிட்ட கூட்டறிக்கையில் ஜம்மு காஷ்மீர் குறித்து குறிப்பிடப்பட்டிருந்த கருத்துகளுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவின் நிலைப்பாட்டை மிகவும் கடுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், “சீனா-பாகிஸ்தான் கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ள ஜம்மு காஷ்மீர் குறித்த தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற கருத்துகளை இந்தியா முழுமையாக நிராகரிக்கிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகள். அவை எப்போதும் இந்தியாவின் பகுதிகளாகவே தொடரும்” என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவில் முழுவேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை! பிரதமர் மோடி நம்பிக்கை!
மேலும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் இந்தியா ஒருபோதும் ஏற்காது என்றும் அவர் வலியுறுத்தினார். பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளை சட்டபூர்வமாக காட்டும் முயற்சிகளை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் கூறினார்.
1963ஆம் ஆண்டு சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான எல்லை ஒப்பந்தத்தையும் இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது. இரு நாடுகளும் சட்டபூர்வமான பொதுவான எல்லையை பகிர்ந்து கொள்ளாத நிலையில் அந்த ஒப்பந்தம் செல்லாது என இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பலமுறை இந்தியா தனது எதிர்ப்பை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.
சமீப காலமாக ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் இந்த கடும் பதில் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், வெளிநாடுகளின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் மத்திய அரசு மீண்டும் உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது!! 1000 ஆண்டுகளுக்கு உத்வேகமாகத் திகழும் - மோடி பெருமிதம்!