×
 

நிலநடுக்கத்தால் ஆட்டம் கண்ட வெனிசுலா..!! நிவாரண உதவிகளை அனுப்பிய இந்தியா..!!

‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ என்ற திட்டத்தின்கீழ் வெனிசுலா மக்களுக்கு நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை கடந்த ஜூன் 24-ம் தேதி மாலை இரட்டை நிலநடுக்கங்கள் தாக்கின. ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இந்த அதிர்வுகள் வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் ஏற்பட்டன. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கங்கள் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை, குறிப்பாக லா குவைரா மற்றும் தலைநகர் கராகஸை பெரிதும் பாதித்தன.

பல வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள், பாலங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகள் கடுமையான சேதத்தை சந்தித்தன. இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 774 கட்டிடங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. சுமார் 67.6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பேரிடரால் ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை, உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடப் பற்றாக்குறை ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன. சர்வதேச சமூகம் உடனடியாக உதவிக்கு முன்வந்துள்ளது. அந்த வகையில், இந்தியா தனது மனிதாபிமான உதவியை விரைவாக வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

இந்தியாவின் ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’: இந்திய அரசு ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ (Amistad என்றால் ஸ்பானிஷ் மொழியில் நட்பு) என்ற பெயரில் சிறப்பு நிவாரண நடவடிக்கையை தொடங்கியது. இதன் கீழ், இரண்டு இந்திய விமானப்படை C-17 குளோப்மாஸ்டர் III விமானங்கள் டெல்லியிலிருந்து கராகஸுக்கு 14,000 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தூரத்தை கடந்து, சுமார் 23 மணி நேரப் பயணத்தை முடித்தன.'

இந்த விமானங்கள் மருத்துவக் குழுவினர், மருத்துவ உபகரணங்கள், நிவாரணப் பொருட்கள் மற்றும் BHISHM க்யூப்ஸ் (விரைவாக அமைக்கக்கூடிய தற்காலிக மருத்துவமனை அமைப்புகள்) ஆகியவற்றை ஏற்றிச் சென்றன. 41 பேர் கொண்ட இந்திய ராணுவ மருத்துவக் குழு, மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் உள்ளிட்ட 35 டன் மேல் நிவாரணப் பொருட்களை கொண்டு சென்றது.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘எக்ஸ்’ தளத்தில், “இந்தியா அனுப்பிய நிவாரண உதவிகள் வெனிசுலாவை சென்றடைந்துள்ளன. இந்த மனிதாபிமான உதவி அங்கு நடைபெறும் மீட்புப் பணிகளை வலுப்படுத்தும்” என்று தெரிவித்தார். இந்திய விமானப்படையும் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தி, இந்தியா ஒரு பொறுப்பான முதல் நிலை மீட்பாளராகவும், நம்பகமான கூட்டாளியாகவும் திகழ்வதை வலியுறுத்தியது.

இந்த உதவி வெனிசுலா மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற இந்திய தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்தியாவின் இந்த நடவடிக்கை உலக அரங்கில் பாராட்டைப் பெற்றுள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படாத நிலையில், சர்வதேச உதவிகள் தொடர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: இடிபாடுகளுக்கு இடையே பிரசவம்... உலகத்தையே உலுக்கிய வெனிசுலா நிலநடுக்கத்திற்கு இடையே அற்புதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share