‘ஹனி டிராப்’ வலையில் சிக்கிய இந்திய விமானப்படை அதிகாரி? பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் கசியவிட்டதாக கைது
பாகிஸ்தானின் 'ஹனி டிராப்' வலையில் சிக்கிய இந்திய விமானப்படை அதிகாரி, நம் நாட்டின் ரகசியங்களை கசிய விட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடில்லி: பாகிஸ்தானின் உளவு அமைப்பிடம் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்ந்ததாகக் கூறப்படும் இந்திய விமானப்படை விங் கமாண்டர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் மூலம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘ஹனி டிராப்’ வலையில் அந்த அதிகாரி சிக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
44 வயதான அந்த விமானப்படை அதிகாரி கடந்த மே 30ம் தேதி கைது செய்யப்பட்டதாகவும், அவருக்கு எதிராக அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட தகவல் சுமார் 50 நாட்களுக்குப் பிறகே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 30ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படை அதிகாரியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, விமானப்படை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியதாக போலீசார் கூறுகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த அதிகாரி இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரகசிய ஆவணங்களை பெண் ஒருவருடன் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆவடியில் விமானப்படை தேர்வில் அதிர்ச்சி... ஆள்மாறாட்டம், ரகசிய கருவி மூலம் மோசடி; 4 பேர் கைது!
மேலும், அந்தப் பெண் அதிகாரியிடம் அவரது சக ஊழியரின் செல்போனில் ஒரு செயலியை நிறுவுமாறு கேட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த செயலி செல்போனில் உள்ள தகவல்களை திருடவும், பயனரின் இருப்பிடத்தை கண்காணிக்கவும் பயன்படுத்தக்கூடிய ‘ஸ்பைவேர்’ ஆக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட விமானப்படை அதிகாரி டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
‘ஹனி டிராப்’ என்பது பொதுவாக காதல் அல்லது நெருக்கமான உறவு ஏற்படுத்துவது போன்று நடித்து, இலக்காக கருதப்படும் நபரிடம் இருந்து ரகசிய தகவல்கள், பணம் அல்லது முக்கிய ஆவணங்களை பெறும் உளவு அல்லது மோசடி முறையாகும். பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்?! தீயாய் பரவும் வீடியோ! 2,500 பேரை அடையாளம் கண்டது போலீஸ்!