×
 

இன்று பூமி திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.. கொண்டாட காத்திருக்கும் நாசா.. பெருமிதத்தில் இந்தியா!!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்புகின்றனர். 'டிராகன்' விண்கலம் கலிபோர்னியா கடற்கரையில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சியம்-4 (Ax-4) விண்வெளி திட்டம், நாசா, ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவை உள்ளடக்கிய ஒரு தனியார் விண்வெளி பயணமாகும்.

இந்த திட்டம் 2025 ஜூன் 25 அன்று புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியாவின் மற்றொரு மைல்கல் பயணமாக, 1984இல் ராகேஷ் ஷர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்ற இரண்டாவது இந்தியராக சுக்லா பதிவு செய்யப்பட்டார்.

சுபான்ஷு சுக்லா, இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனாகவும், 2006 முதல் போர் விமானியாகவும், சோதனை விமானியாகவும் பணியாற்றி வருகிறார். உத்தரபிரதேசத்தின் லக்னோவில் 1985 அக்டோபர் 10 அன்று பிறந்த இவர், 2000 மணி நேர விமான அனுபவம் பெற்றவர். இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்காக 2019இல் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவரான இவர், ஆக்சியம்-4 திட்டத்தில் பைலட்டாக பணியாற்றினார். இவரது மனைவி கம்னா மிஸ்ரா மற்றும் ஆறு வயது மகனுடன் புளோரிடாவில் தங்கி இந்த வரலாற்று நிகழ்வை கண்டார்.

ஆக்சியம்-4 திட்டம் பல தாமதங்களை சந்தித்தது. முதலில் ஜூன் 11, 2025 அன்று திட்டமிடப்பட்டிருந்த இந்த ஏவுதல், ஃபால்கன் 9 ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் கசிவு மற்றும் விண்வெளி நிலையத்தின் ஸ்வெஸ்டா தொகுதியில் ஏற்பட்ட கசிவு காரணமாக ஜூன் 25ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் மோசமான வானிலை ஆகியவை மிஷனை சவாலாக்கின.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கியிருந்த குழு, 31 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 60 ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் இஸ்ரோவின் ஏழு ஆய்வுகள் அடங்கும், இவை மைக்ரோகிராவிட்டியில் தாவர வளர்ச்சி, தார்டிகிரேட்களின் (நுண்ணுயிரிகள்) உயிர் தகவமைப்பு, தசை இழப்பு, மைக்ரோஆல்கே வளர்ச்சி மற்றும் மனித-கணினி தொடர்பு ஆகியவற்றை ஆராய்ந்தன.

இந்த ஆய்வுகள் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கான உணவு, ஆக்சிஜன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு முக்கியமானவை.

இவர்கள் ஆய்வுகளை முடித்துக் கொண்டு இன்று பூமிக்கு புறப்படவுள்ளனர். இதற்கான வழியனுப்பும் நிகழ்ச்சி சர்வதேச விண்வெளி மையத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய இந்திய வீரர் சுபாஷு சுக்லா, விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி தெரிகிறது என்பதை நெகிழ்ச்சியோடு கூறினார்.

 "நமஸ்கார், என் அன்பு நாட்டு மக்களே! 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விண்வெளிக்கு வந்திருக்கிறோம். 7.5 கி.மீ/விநாடி வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறோம். என் தோளில் உள்ள மூவர்ணக்கொடி, நீங்கள் அனைவரும் என்னுடன் இருப்பதை உணர்த்துகிறது.

இது எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமல்ல, இந்தியாவின் மனித விண்வெளி திட்டத்தின் ஆரம்பமாகும். இந்தப் பயணத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டும். ஜெய்ஹிந்த்! ஜெய்பாரத்!" என்று உருக்கமாக பேசினார். மேலும், விண்வெளி நிலையத்தில் இருந்து, "சாரே ஜஹான் சே அச்சா" என்ற ராகேஷ் ஷர்மாவின் பிரபலமான வாசகத்தை மீண்டும் குறிப்பிட்டு, இந்தியாவின் பெருமையை வெளிப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து தங்கள் வாழ்த்தையும், அன்பையும் பரிமாரிக் கொண்டனர். இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ‘டிராகன்’ விண்கலத்தின் கதவுகள் திறக்கப்படும். அதைத் தொடர்ந்து, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்கள் விண்கலத்திற்குள் செல்வார்கள்.

இன்று மாலை 4.45 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ‘டிராகன்’ விண்கலம் தனியாகப் பிரிக்கப்பட்டு, பூமியை நோக்கிய பயணம் தொடங்கும். சுமார் 24 மணிநேர பயணத்திற்குப் பிறகு நாளை பிற்பகல் 3 மணியளவில் வட அமெரிக்காவின் பசிபிக் பெருங்கடலை ஒட்டிய கலிபோர்னியா கடற்கரையில் ’டிராகன்’ விண்கலம் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share