2030 காமன்வெல்த் தொடர்.. இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிக்கு IOA ஒப்புதல்..!!
2030 காமன்வெல்த் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
24-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் (XXIV Commonwealth Games) 2030-ம் ஆண்டு நடைபெற உள்ளன. இது காமன்வெல்த் விளையாட்டுகளின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் முக்கிய நிகழ்வாகும். இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியா, கனடா, நைஜீரியா உள்ளிட்ட ஏழு நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. மேலும் 2036-ல் நடைபெற ஒலிம்பிக் தொடரை நடத்தும் வாய்ப்பை பெற இந்தியா முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) 2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிக்கு இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில் (SGM) ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு, இந்தியாவை ஒரு முக்கிய விளையாட்டு மையமாக உருவாக்குவதற்கும், 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சியின் முதல் படியாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 50 பேருக்கு ஒரே அப்பா! மோடி வெற்றிக்கு ஆப்பா? வாரணாசி வாக்காளர் பட்டியலால் வெடித்தது சர்ச்சை!!
அகமதாபாத் நகரம் முதன்மை புரவலன் நகரமாக முன்மொழியப்பட்டுள்ளது, மேலும் புவனேஸ்வர் நகரமும் பரிசீலனையில் உள்ளது. இந்தியா ஏற்கனவே 2030 காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான ஆர்வக் கடிதத்தை (EOI) சமர்ப்பித்துள்ளது, ஆனால் இறுதி முன்மொழிவை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். கனடா இந்தப் போட்டியில் இருந்து விலகியதால், இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் மேலும் வலுவடைந்துள்ளன.
காமன்வெல்த் விளையாட்டு இயக்குநர் டாரன் ஹால் தலைமையிலான அதிகாரிகள் குழு, அகமதாபாத்தில் உள்ள விளையாட்டு வசதிகளை ஆய்வு செய்யவும், குஜராத் அரசு அதிகாரிகளைச் சந்திக்கவும் சமீபத்தில் வருகை தந்தது. மேலும், இந்த மாத இறுதியில் பெரிய அளவிலான குழு ஒன்று மீண்டும் ஆய்வு செய்ய உள்ளது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு மத்திய அரசு முழு நிதியுதவி வழங்க உறுதியளித்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு மையம் மற்றும் நரன்புரா விளையாட்டு வளாகம் போன்ற உள்கட்டமைப்புகள் இந்தப் போட்டிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இவை நீச்சல், குத்துச்சண்டை, கிரிக்கெட், ஜிம்னாஸ்டிக்ஸ், பேட்மிண்டன், ஜூடோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுகின்றன.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இணைச் செயலாளர் கல்யாண் சவுபே, "இந்த ஒப்புதல் ஒருமனதாக வழங்கப்பட்டது. இனி முழு வீச்சில் தயாரிப்புகளைத் தொடங்குவோம்" என்று தெரிவித்தார். 2030 காமன்வெல்த் விளையாட்டு விழா முழுமையானதாக இருக்கும் என்றும், இந்தியாவின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு விளையாட்டுகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் IOA நிர்வாகக் குழு உறுப்பினர் ரோஹித் ராஜ்பால் கூறினார்.
நவம்பர் மாத இறுதியில் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு பொதுச் சபையில் இறுதி புரவலன் நாடு அறிவிக்கப்படும். இந்தியா ஏற்கனவே 2010-ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளை புதுடெல்லியில் நடத்தியுள்ளது. அப்போது சில குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், போட்டிகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியர்களை குறிவைத்து இனவெறி தாக்குதல்!! 3 பேர் படுகாயம்.. அயர்லாந்து அதிபர் ரியாக்ஷன்..