"ஸ்மார்ட்போன் முதல் சாப்பாடு வரை" டிஜிட்டல் கணக்கெடுப்பிற்குத் தயாராகும் இந்தியா; அரசாணை வெளியீடு!
இந்தியாவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தொடங்கப்படவுள்ள 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகளுக்கான 33 கேள்விகள் அடங்கிய பட்டியலை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் (Census 2026-27) வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், முதற்கட்டமான 'வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில்' (Houselisting and Housing Census) கேட்கப்படவுள்ள 33 கேள்விகள் அடங்கிய பட்டியலை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 29 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்ட நிலையில், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நவீனத் தேவைகளுக்கு ஏற்ப கேள்விகளின் எண்ணிக்கை 33-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த முதற்கட்டக் கணக்கெடுப்பில் ஒவ்வொரு வீட்டின் நிலை, அங்குள்ள வசதிகள் மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். வீட்டின் தரை, சுவர் மற்றும் கூரைக்கு என்ன பொருட்கள் (சிமெண்ட், மரம், ஓடு போன்றவை) பயன்படுத்தப்பட்டுள்ளன.குடிநீர் ஆதாரம், கழிப்பறை வசதி, கழிவுநீர் வெளியேற்றம், குளியலறை வசதி மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள்.
வீட்டில் இணைய வசதி உள்ளதா? கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட்போன், வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளதா? போன்ற விவரங்கள் கேட்கப்படும்.மிதிவண்டி, ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் மற்றும் கார், ஜீப் போன்ற வாகனங்களின் எண்ணிக்கை.குடும்பத்தினர் முக்கியமாக உட்கொள்ளும் தானியம் (Cereal consumed) எது?.குடும்பத் தலைவர் ஆணா அல்லது பெண்ணா? அவர் SC/ST பிரிவைச் சேர்ந்தவரா? மற்றும் குடும்பத்தில் உள்ள திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை? இது போன்ற கேள்விகள் கேட்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: இன்டிகோவிற்கு ரூ.22.2 கோடி அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக இந்தக் கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது. சுமார் 30 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 'மொபைல் செயலி' மூலம் தரவுகளைச் சேகரிப்பார்கள். ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை முதற்கட்டப் பணிகளும், 2027 பிப்ரவரி மாதம் இரண்டாம் கட்டமான 'மக்கள் தொகை கணக்கெடுப்பு' பணிகளும் நடைபெறும். இந்தக் கணக்கெடுப்பில் முதன்முறையாகச் சாதி வாரியான விவரங்களும் சேகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: வங்கிகள் முடங்கும் அபாயம்! ஜனவரி 27-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்!