×
 

ஆபரேஷன் சிந்தூரில் அப்துல் அசார் பலி; யார் இவர்? எந்த சம்பவத்தில் தொடர்புடையவர்?

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.  பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார்.

இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன. பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம்), முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்), கோட்லி (தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம்), முசாபராபாத் (இறக்குமதி முகாம்), பர்னாலா (லஷ்கர் ஆதரவு முகாம்), சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம்) ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: பாக். திட்டத்தை தவிடுபொடியாக்கிய இந்தியா.. பதிலடி தாக்குதல் முயற்சியில் படுதோல்வி!!

இதற்கிடையே சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான அப்துல் ரவூப் அசாரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 1999 டிசம்பரில் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் வழியில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான IC-814 விமானம் கடத்தப்பட்டது. இந்த விமான கடத்தலில் ஈடுபட்டவர்களில் அப்துல் ரவூப் அசாரும் ஒருவர். மொத்தம் 5 தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தி, தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்றனர். விமானப் பயணிகளை விடுவிக்க மசூத் அசாரை விடுவிக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. இதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்தவர் அசார், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்தியாவால் பல ஆண்டுகளாகத் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவராகவும் இருந்தார். இவர் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் இளைய சகோதரரும் ஆவார். பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தில் நடந்த தாக்குதலில் அசார் கொல்லப்பட்டுள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத் தாக்குதலில் அசார் முதலில் படுகாயமடைந்திருந்தார். இந்தச் சூழலில் அவர் இப்போது உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு பால் அபிஷேகம்; தமிழகத்துக்கு கடும் விமர்சனம்... வைரலாகும் எக்ஸ் தள பதிவு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share