ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், ரியான் ரிகெல்டனின் அதிரடி சதத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 243 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. வான்கேடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியுள்ளது.
மும்பை அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய ரியான் ரிகெல்டன் ஆரம்பம் முதலே சன்ரைசர்ஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 55 பந்துகளைச் சந்தித்த அவர், 10 பவுண்டரிகள் மற்றும் 8 மெகா சிக்ஸர்களுடன் 123 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது ஐபிஎல் அரங்கில் ரிகெல்டனின் முதல் சதமாகும். குறிப்பாக, 44 பந்துகளிலேயே சதமடித்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாகச் சதமடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ரிகெல்டனுடன் இணைந்து அதிரடி காட்டிய வில் ஜாக்ஸ் 22 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இவர்களது பார்ட்னர்ஷிப் பவர்பிளே ஓவர்களிலேயே சன்ரைசர்ஸ் அணியை நிலைகுலைய வைத்தது. இறுதியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 240-ஐத் தாண்டச் செய்தார்.
இதையும் படிங்க: வெற்றியுடன் தொடங்குமா சிஎஸ்கே? இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதல்!
சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களில் ஈஷன் மலிங்கா (1/29) மட்டுமே ஓரளவிற்கு ரன்களைக் கட்டுப்படுத்தினார். பிரஃபுல் ஹிங்கே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 4 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கினார். தற்சமயம் 244 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில் 'யுடிஎப்' வெற்றி வாய்ப்பு - இடதுசாரிகளுக்குப் பின்னடைவா?