அழுத்தத்திற்கு அஞ்சி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்!! அமெரிக்காவுக்கு ஈரான் திட்டவட்டம்!!
அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள அழுத்தத்துக்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது தற்போது நடைபெற்று வரும் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து போர் தொடர்ந்து வருகிறது. ஈரான் இதற்கு பதிலடியாக ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் உலக அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு, எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில் மே 1ஆம் தேதி வரை போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பின்னர், இரண்டாவது கட்ட பேச்சுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு பாகிஸ்தான் சென்றது. அமெரிக்க குழுவினரும் பாகிஸ்தான் வருவதாக இருந்த நிலையில், அதிபர் டிரம்ப் திடீரென அந்தப் பயணத்தை ரத்து செய்தார்.
இதையும் படிங்க: எங்க கண்ணிவெடி வச்சோம்னு தெரிலையே!! ஹார்முஸ் ஜலசந்தி திறப்பில் சிக்கல்! கையை பிசையும் ஈரான்!
இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் உரையாடிய ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், “அமெரிக்கா அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போர் நிறுத்த உடன்படிக்கைகளை மீறுகிறது. இது ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கு முரணானது” என்று விமர்சித்தார்.
மேலும், “தேசிய பாதுகாப்பைப் பேணுவதில் ஈரான் உறுதியாக உள்ளது. அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். அமெரிக்கா முதலில் தடைகளை நீக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். ஈரான் தனது இறையாண்மையையும் பாதுகாப்பையும் எந்த விலையும் கொடுத்து பாதுகாக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தப் போர் தொடங்கியதிலிருந்து ஹார்மூஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறு உலகப் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. பல நாடுகள் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஓமன் போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்ய முயற்சி எடுத்து வருகின்றன.
ஈரான் அதிபரின் இந்த உறுதியான நிலைப்பாடு, போர் நீடிக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தூதர்களின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்ததால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மங்கியுள்ளன. இருப்பினும், இரு தரப்பும் தொலைபேசி மூலம் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், உலக நாடுகள் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தரைவழி தாக்குதல் நடத்தினால் சுறாக்களுக்கு இரையாவீர்கள்!! அமெரிக்க வீரர்களுக்கு ஈரான் வார்னிங்!