ஜப்பானே அசந்து போச்சு!! இந்தியா செய்த அசத்தல் சாதனை!! இஸ்ரோ தலைவர் ருசிகர தகவல்!!
எல்விஎம்-3 எம்6 ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்துக்கான ப்ளூபேர்ட்-6 (ப்ளூபேர்ட் பிளாக்-2) நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளை இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து டிசம்பர் 24-ம் தேதி காலை 8.54 மணிக்கு ராக்கெட் விண்ணை நோக்கி பாய்ந்தது. ராக்கெட் புறப்பட்டு 15 நிமிடங்கள் 52 வினாடிகளில் 520 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவியின் தாழ் வட்டச் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.
இந்த வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் செய்தியாளர்களிடம் பேசினார். இந்த ராக்கெட் ஏவுதல் இந்தியாவுக்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து உயரப் பறக்கிறது!! பாகுபலியை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோவுக்கு மோடி பாராட்டு!
இந்திய மண்ணில் இருந்து இதுவரை ஏவப்பட்டதிலேயே மிகப்பெரிய செயற்கைக்கோள் இதுவாகும் என்று தெரிவித்தார். இந்தப் பணியின் மூலம் இந்தியா இப்போது 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பெருமையைப் பெற்றுள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், இந்த வெற்றி ககன்யான் திட்டத்துக்கு மேலும் நம்பிக்கையை அளிக்கிறது என்று கூறினார். 2017 முதல் இன்று வரை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் நடத்தப்பட்ட அனைத்து ஏவுதல்களும் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன என்று சுட்டிக்காட்டினார். ககன்யான் திட்டத்தின் மனித மதிப்பீட்டு நிலைக்கு ஒதுக்கப்பட்ட ராக்கெட் இதுவே என்றும் தெரிவித்தார்.
சந்திரயான்-4 மற்றும் 5 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வலிமைதான் வலிமையை மதிக்கும் என்ற பழமொழியை குறிப்பிட்ட அவர், சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு ஜப்பான் போன்ற தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடு இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்பியதை எடுத்துக்காட்டினார். இன்று விண்வெளி சாதனையில் உலகின் முன்னணி நாடுகளுடன் இந்தியா தோளோடு தோள் நிற்கிறது என்று பெருமையுடன் தெரிவித்தார்.
இஸ்ரோவின் இந்த சாதனை உலகளாவிய விண்வெளி துறையில் இந்தியாவின் திறனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. ககன்யான் போன்ற மனித விண்வெளி திட்டங்களுக்கு இது பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தொடங்கியது கவுண்டவுன்!! அமெரிக்க செயற்கோளை சுமந்தபடி நாளை விண்ணில் பாய்கிறது பாகுபலி!