விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ'வில், 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் திடீரென விலகிய நிலையில், புதிதாக விஞ்ஞானிகளை சேர்த்து மறுசீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெருமைமிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO), கடந்த சில மாதங்களாக 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் திடீரென பதவி விலகியதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து, காலியாகியுள்ள பணியிடங்களை விரைவாக நிரப்பும் வகையில் மத்திய அரசு மற்றும் இஸ்ரோ நிர்வாகம் தீவிர ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தகவல்களின்படி, பதவி விலகியவர்களில் பலர் முன்னணி தனியார் விண்வெளி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக சம்பளம் மற்றும் உயர்ந்த பதவிகளைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெளியேற்றம் 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததால், இஸ்ரோவின் சில முக்கிய ஆய்வு மற்றும் தொழில்நுட்ப பணிகளில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையைத் தொடர்ந்து, புதிய திறமையான விஞ்ஞானிகளை விரைவாக நியமிக்கும் பணியில் இஸ்ரோ மத்திய ஆட்சேர்ப்பு வாரியமான ICRB தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, GATE தேர்வில் தேர்ச்சி பெற்ற பொறியியல் பட்டதாரிகளில் இருந்து மொத்தம் 92 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: இஸ்ரோவில் இருந்து வெளியேறும் விஞ்ஞானிகள்? 1,000 பேர் விலகியதாக தகவல்... புதிய திட்டங்களுக்கு சவால்!
இதில் மின்னணுவியல் பிரிவில் 34, இயந்திரவியல் 26, கணினி அறிவியல் 13, சிவில் 10, மின்சாரம் 4, குளிர்பதனம் 2, கட்டடக்கலை 2 மற்றும் கட்டுமானப் பிரிவில் ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் விஞ்ஞானிகள் பெங்களூரு, திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா, ஹைதராபாத், ஆமதாபாத் மற்றும் மகேந்திரகிரி உள்ளிட்ட இஸ்ரோ மையங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், 244 நிர்வாகப் பணியிடங்களுக்கும் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் 113 உதவியாளர், 81 இளநிலை தனி உதவியாளர், 22 மேல்நிலை எழுத்தர் மற்றும் 10 சுருக்கெழுத்தர் பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், பொறியியல் பட்டதாரிகளுக்கான பயிற்சி திட்டத்தின் கீழ் 220 பட்டதாரிகள், 120 தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் மற்றும் 70 வர்த்தகப் பயிற்சியாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது, இஸ்ரோ தனது மனிதவளத்தை மறுசீரமைத்து, எதிர்கால விண்வெளி திட்டங்களை மேலும் வேகமாக முன்னெடுக்கத் தயாராகி வருவதை காட்டுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மாதம் ஒரு ராக்கெட் ஏவ இலக்கு! அடுத்த மெகா திட்டம்!விக்ரம்-1' வெற்றிக்குப் பிறகு ஸ்கைரூட் அதிரடி அறிவிப்பு!