75 டன் எடை செயற்கைக்கோள்.. நிறுத்த 40 மாடி உயர ராக்கெட்.. இஸ்ரோவின் அடுத்த பாய்ச்சல்..!
75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்த 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO), 75 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக 40 மாடி கட்டிடத்துக்கு நிகரான உயரமுள்ள ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் அறிவித்தார். இந்த மாபெரும் திட்டம் இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் துறையில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய நாராயணன், நடப்பாண்டில் இந்திய ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவின் 6,500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அத்துடன், NAVIC (இந்திய விண்மீன் அமைப்புடன் வழிசெலுத்தல்) செயற்கைக்கோள் மற்றும் என்1 ராக்கெட் போன்ற திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
இதையும் படிங்க: நாளை விண்ணில் பாய்கிறது நிசார்!! பூமியை இன்ச் பை இன்ச் படம் பிடிக்கும் சேட்டிலைட்!!
தற்போது 75,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் செலுத்தும் ராக்கெட்டை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த ராக்கெட் 40 மாடி கட்டிட உயரம் கொண்டது. இந்த ஆண்டு தொழில்நுட்ப செயல்விளக்க செயற்கைக்கோள் (TDS) மற்றும் இந்திய இராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-7ஆர் (GSAT-7R) ஆகியவற்றை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது தற்போதுள்ள ஜிசாட்-7 (ருக்மிணி) செயற்கைக்கோளுக்கு மாற்றாக, இந்திய கடற்படைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவின் 55 செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் உள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் இந்த ராக்கெட், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், புவிசார் நிலையான சுற்றுப்பாதையில் (Geostationary Orbit) கனரக செயற்கைக்கோள்களை நிறுத்துவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. 75 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் திறன் பெற்ற இந்த ராக்கெட், தற்போதைய LVM3 (GSLV Mk III) ராக்கெட்டை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது.
இதன் மூலம், இந்தியா விண்வெளி ஆய்வில் உலகளாவிய முன்னணி நாடுகளுடன் போட்டியிட முடியும். இந்த ராக்கெட் திட்டம், இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கும், சந்திரயான் மற்றும் ககன்யான் திட்டங்களை மேம்படுத்துவதற்கும் உதவும். மேலும், 7,000 கி.மீ. தொலைவில் உள்ள கடலோர பகுதிகள் மற்றும் வடக்கு எல்லைகளை கண்காணிக்க இந்த செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றும் என்று நாராயணன் குறிப்பிட்டார். இஸ்ரோ ஏற்கனவே 34 நாடுகளின் 433 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது, இது இந்தியாவின் தொழில்நுட்ப திறனை எடுத்துக்காட்டுகிறது.
இந்த முயற்சி, உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதோடு, விண்வெளி ஆய்வில் இந்தியாவின் பங்களிப்பை உலக அரங்கில் மேலும் உயர்த்தும். இத்தகைய கனரக ராக்கெட் தயாரிப்பு, இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய அத்தியாயத்தை எழுதும் என்பதில் சந்தேகமில்லை.
விழாவின்போது, இந்திய விண்வெளித் திட்டத்திற்கு ஆற்றிய முக்கிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு தெலுங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, கௌரவ அறிவியல் முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தார்.
இதையும் படிங்க: 2035ம் ஆண்டுக்குள் இஸ்ரோ நிச்சயம் இதை உருவாக்கும்.. இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி..!!