பாக். உளவாளிக்கு 'RED CARPET' வரவேற்பு.. ஷாக் கொடுத்த கேரள அரசு.. யார் அந்த சர்ச்சை யூடியூபர்..?
கேரள அரசால் சுற்றுலா விருந்தினராக யூடியூபர் ஜோதி மல்கோத்ரா அழைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா கடந்த மே மாதம் 16ம் தேதி 'Operation Sindoor' என்ற உளவு எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கும், டெல்லியில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருந்ததால் அவர் பலமுறை பாகிஸ்தானுக்கு சென்று வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் கேரளாவின் முக்கிய வருமானங்களில் ஒன்றான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏராளமான யூடியூபர்களை அழைத்து, அவர்களது பக்கத்தில் கேரளாவின் சுற்றுலா தலங்களை புகழ்ந்து போட வைத்தது கேரள அரசு. அதில் பிரபல யூடியூபர் ஜோதி மல்கோத்ராவும் ஒருவர். கண்ணூர், கோழிக்கோடு, கொச்சி, ஆலப்புழா, மூணாறு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களை அவர் பயணித்து, தெய்யம் நிகழ்ச்சிகள் உட்பட கேரளாவின் இயற்கை அழகுகளை வீடியோக்களாக பதிவு செய்தார். பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஒருவரை கேரளா அரசு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காதல் மனைவிக்கு டார்ச்சர்... பிரபல யூடியூபர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு!!
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மாநில அரசு அளித்த பதிலில், 'கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கில் 41 பிரபல யூடியூபர்களுக்கு மாநில சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்திருந்தது. அவர்களின் பயணம், தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான செலவை கேரள சுற்றுலாத்துறை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அவ்வாறு வந்தவர்கள் கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வீடியோக்களை எடுத்து வெளியிட்டார்கள். அதில் ஜோதி மல்கோத்ராவும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கேரளாவுக்கு உளவு பார்த்த ஒருவருக்கு அம்மாநில அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஒருவரின் பின்னணி பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் ஒரு அரசு எவ்வாறு அவருக்கு அழைப்பு விடுக்கலாம் என காங்கிரஸ், பாஜக ஆகியவை கேள்வி எழுப்பி உள்ளன.
இதுகுறித்து பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா வெளியிட்ட 'எக்ஸ்' பதிவில், "பாரத மாதாவுக்கு தடை விதிப்பார்கள். ஆனால், பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பார்களா?. சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ், முதல்வர் பினராயி விஜயனின் மருமகன். அவரை பதவி நீக்கம் செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
இதனிடையே சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ், "கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட் நடவடிக்கையில் ஒன்று தான் இது. சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க பலரை அழைத்தோம். அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் ஜோதி மல்ஹோத்ரா. ஜோதியின் உளவு தொடர்புகள் பற்றி அரசுக்கு எந்த தகவலும் இல்லை, இது ஒரு வெளிப்படையான, வழக்கமான சுற்றுலா பிரச்சாரம் மட்டுமே என்று கூறினார்.
இந்த சம்பவம், அரசு நிதியுதவியுடன் கூடிய செல்வாக்கு செலுத்துபவர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் பின்னணி சரிபார்ப்பு இல்லாதது குறித்து தேசிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளது. ஜோதியின் யூடியூப் சேனலில் உள்ள 487 வீடியோக்கள், குறிப்பாக பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் தாய்லாந்து பயணங்களை உள்ளடக்கியவை, உளவு தொடர்பான உள்ளடக்கங்களுக்கு ஆய்வு செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க: முக்கியமான லெவல் கிராசிங்... அதெல்லாம் சரி சிக்னலோட ஏன் இணைக்கல? சு.வெங்கடேசன் சரமாரி கேள்வி