ஆகஸ்ட் 1-ல் செல்ல வேண்டியவர்கள் 23-ம் தேதிக்கு மாற்றம்! நேபாள வெள்ளத்தில் இந்தியர்களை சிக்க வைத்த சீனா நாள்காட்டி?
தேதி மாற்றம் காரணமாக, குழுவுடன் நேபாளம் வர திட்டமிட்டிருந்த சில பக்தர்களால் பயணத்தை தொடர முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
கைலாய யாத்திரைக்காக தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்ற பக்தர்கள், அங்கு ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சிக்கித் தவிக்கும் நிலையில், அவர்களின் பயணத் தேதி ஏற்கனவே மாற்றப்பட்டிருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஆகஸ்ட் 1-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த பயணம், நேபாள அதிகாரிகளிடம் அனுமதி கிடைக்காததால் ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக கும்பகோணத்தைச் சேர்ந்த சுற்றுலா ஏஜென்ஸி நிறுவனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறிய தகவலின்படி, தமிழகத்தில் இருந்து ஆகஸ்ட் 1-ம் தேதி நேபாளம் சென்று கைலாய யாத்திரையை தொடங்குவதற்காக முன்கூட்டியே அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த தேதிக்கு நேபாள அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை என்றும், இதனால் மீண்டும் ஆகஸ்ட் 20-ம் தேதிக்குப் பிறகு பயணம் மேற்கொள்ளும் வகையில் விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சீன நாள்காட்டியை அடிப்படையாகக் கொண்டு ஆகஸ்ட் 1 முதல் 20-ம் தேதி வரை குறிப்பிட்ட காலகட்டத்தில் சில மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், அதன் காரணமாக தங்களது விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, அந்த காலகட்டத்தில் ஜெயின் மத பக்தர்களுக்கு நேபாள கோயில்களில் வழிபாடு நடத்த முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வைரல் வீடியோவில் இருப்பது அமைச்சர் இல்லை! நான் தான்! கண்கலங்கிய மலேஷிய பெண்.. பரபரப்பு விளக்கம்!
இதன் காரணமாகவே ஆகஸ்ட் 1-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தங்களது பயணம் ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேதி மாற்றம் காரணமாக, குழுவுடன் நேபாளம் வர திட்டமிட்டிருந்த சில பக்தர்களால் பயணத்தை தொடர முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சில பயணிகளின் பாஸ்போர்ட்டுகள் கூட தன்னிடம் இருப்பதாக அந்த ஏஜென்ஸி நிறுவனர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஆகஸ்ட் 23-ம் தேதி நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த கைலாய யாத்திரை பக்தர்கள், அங்கு ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பயணத் தேதி மாற்றத்திற்கான காரணமாக கூறப்படும் தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் மற்றும் ஆவணங்கள் வெளியாகும்போது, இந்த விவகாரத்தின் முழுமையான பின்னணி மேலும் தெளிவாகும்.
இதையும் படிங்க: வெங்காய விலை தாறுமாறு உயர்வு! களத்தில் இறங்கிய மத்திய அரசு! இன்று முதல் முக்கிய நடவடிக்கை!