×
 

3 தமிழர்கள் படுகொலை ‘போலி என்கவுன்ட்டரா?’... பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலய வனப்பகுதியில் கடந்த 15ஆம் தேதி அதிகாலை வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்தனர். தோமியார்பாளையா கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (45), செபாஸ்டின் டேவிட் குமார் (33) ஆகியோர் உயிரிழந்தனர்.

வேட்டை கும்பல் தங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனால் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வனப்பகுதியில் மாடுகளைத் தேடிச் சென்ற விவசாயிகளையே வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாகக் கூறி பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில், உயிரிழந்த மூன்று பேரின் உடல்களுக்கும் கடந்த 16ஆம் தேதி மைசூரில் உள்ள கே.ஆர். அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

மூன்று பேரும் 10 அடி அல்லது அதற்கும் குறைவான மிக நெருக்கமான தொலைவில் இருந்து 'பம்ப் ஆக் ஷன் ஷாட் கன்' மூலம் சுடப்பட்டிருக்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஜான் ரோஸ் பீட்டரின் இடது காது பகுதியில் இருந்து நெஞ்சு வரை சுமார் 28 செ.மீ. நீளத்திற்கு ஆழமான மற்றும் கடுமையான காயம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மற்ற இருவரின் நெஞ்சு மற்றும் தொடைப் பகுதிகளிலும் பலத்த காயங்கள் இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்தோணிசாமி மற்றும் ஜான் ரோஸ் பீட்டர் ஆகியோரின் உள்ளாடைகளில் இருந்து தலா ஐந்து 'அலுமினியம் பிரைமர்'கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு தொலைவில் இருந்து நடத்தப்பட்டதாக கூறியுள்ள நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழந்தவர்கள் மிக நெருக்கமான தொலைவில் இருந்து சுடப்பட்டதாக கூறப்பட்டிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா, பிரேத பரிசோதனை அறிக்கையின் தகவல்கள் மூன்று பேரும் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share