கர்நாடகாவில் உயர்கிறதா மதுபான விலை..? சூசகமாக சொன்ன முதல்வர் சித்தராமையா..!!
கலால் வரி மாற்றி அமைக்கப்படுவதன் மூலம் மதுபான விலை உயரும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா சூசகமாக பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநில அரசு 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் சித்தராமையா சட்டசபையில் தாக்கல் செய்தார். இது அவரது 17வது பட்ஜெட் ஆகும். மொத்த செலவினத் தொகை ரூ.4 லட்சத்து 48 ஆயிரம் 4 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வருவாய் செலவு ரூ.3 லட்சத்து 38 ஆயிரம் 7 கோடியும், மூலதன செலவு ரூ.74 ஆயிரம் 682 கோடியும் அடங்கும்.
மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் 50 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மாநில சொந்த வரி வருவாய் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடி, வரி அல்லாத வருவாய் ரூ.16 ஆயிரம் கோடி, மத்திய அரசிடமிருந்து வரி பகிர்வு உள்ளிட்ட நிதிகள் ரூ.79 ஆயிரம் 50 கோடி என உள்ளன. கூடுதலாக ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் கோடி நேரடிக் கடன், ரூ.190 கோடி முதலீட்டுக் கடன் மூலம் மொத்தம் ரூ.4 லட்சத்து 47 ஆயிரம் 240 கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறை ரூ.22,957 கோடியாகவும், மொத்த நிதி பற்றாக்குறை ரூ.97 ஆயிரம் 449 கோடியாகவும் உள்ளது. மாநிலத்தின் மொத்த கடன் ரூ.8 லட்சத்து 24 ஆயிரம் 389 கோடியாக இருப்பதாகவும், இவை கர்நாடக நிதி பொறுப்புச் சட்ட விதிகளுக்குள் இருப்பதாகவும் சித்தராமையா தெரிவித்தார். இதன்மூலம் நிதி மேலாண்மை பொறுப்புடன் நடைபெறுவதை அரசு உறுதி செய்வதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: 16 வயசு ஆகலயா..!! அப்போ சோசியல் மீடியா பயன்படுத்த தடை..!! சித்தராமையா அதிரடி அறிவிப்பு..!!
வரி வருவாய் துறைகளில் வணிக வரி (கமர்ஷியல் டேக்ஸ்) ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலால் துறையில் ரூ.45 ஆயிரம் கோடி, முத்திரை மற்றும் பத்திரப் பதிவு துறையில் ரூ.29 ஆயிரம் கோடி, போக்குவரத்து துறையில் ரூ.15 ஆயிரம் 500 கோடி, கனிம வளத் துறையில் ராயல்டி மூலம் ரூ.11 ஆயிரம் கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.
கலால் துறையில் முக்கிய சீர்திருத்தமாக, வரும் ஏப்ரல் முதல் மதுபான வரி அமைப்பு மாற்றப்படவுள்ளது. தற்போது லிட்டர் அடிப்படையில் வரி விதிக்கப்படுவதற்கு பதிலாக, மதுபானத்தில் உள்ள ஆல்கஹால் அளவு (Alcohol-in-Beverage) அடிப்படையில் வரி நிர்ணயிக்கப்படும். இது அடுத்த 3-4 ஆண்டுகளில் படிப்படியாக அமல்படுத்தப்படும். இதனால் விலை நிர்ணயம் 16 நிலைகளிலிருந்து 8 நிலைகளாகக் குறையும்.
மேலும், மதுபான விலையை அரசு நிர்ணயிப்பது நிறுத்தப்பட்டு, உற்பத்தியாளர்களே சந்தை அடிப்படையில் விலை நிர்ணயிக்க அனுமதிக்கப்படும். இந்த மாற்றங்கள் மதுபான விலையில் உயர்வுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலால் துறை பணியிட மாற்றங்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட் மூலம் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு இடையே சமநிலை பேணப்படுவதாக சித்தராமையா வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சித்தராமையா அவர்களுக்கு நன்றி! மாநில சுயாட்சி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!