சித்தராமய்யா முதல்வர் பதவிக்கு சிக்கல்! போர்க்கொடி தூக்கும் சிவக்குமார்! கர்நாடகாவில் கலகக்குரல்!!
கர்நாடகா முதல்வர் பதவியை டிகே சிவகுமாருக்கு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், காங்கிரஸ் தலைமையிடம் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளனர்.
கர்நாடக காங்கிரஸ் அரசியலில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த வதந்திகள் தீவிரமடைந்துள்ளன. துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு ஆதரமாக 6 எம்எல்ஏக்கள் டில்லி சென்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை சந்தித்து, “எஞ்சிய 2.5 ஆண்டுகளுக்கு சிவகுமாருக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் கட்சியின் உச்ச தலைமையில் பரபரப்பு உருவாகியுள்ளது. ஆனால், முதல்வர் சித்தராமையா தனது 5 ஆண்டு காலத்தை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் அரசு 2.5 ஆண்டுகளைத் தொட்டுள்ள நிலையில், முதல்வர் பதவி மாற்றம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. 2023 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சித்தராமையா முதல்வராகவும், சிவகுமார் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: உச்சக்கட்டத்தில் மோதல்! காங்., பொறுப்பில் இருந்து விலகும் சிவக்குமார்!! கர்நாடக அரசியலில் பரபரப்பு!!
அப்போது 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு பதவி பகிர்வு என்று சிலர் கூறினாலும், கட்சி அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இப்போது சிவகுமாருக்கு ஆதரமான எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் கர்நாடக அரசியலில் பெரும் சலச்சலப்பு உருவாகியுள்ளது.
நேற்று (நவம்பர் 20) டில்லி சென்ற சிவகுமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 6 பேர், காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கேவை சந்தித்தனர். அவர்கள், “கர்நாடக அரசின் எஞ்சிய காலத்தில் டி.கே. சிவகுமாருக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும். இது கட்சியின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் உதவும்” என்று வலியுறுத்தினர்.
இதைக் கேட்ட கார்கே, “தலைவர் பதவி, அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட முடிவுகளை ராகுல் காந்தி தான் எடுக்கிறார். இந்தக் கோரிக்கையுடன் டில்லி வருவதை முதலில் தவிர்க்க வேண்டும். ஊடகங்கள் இதை வேறு மாதிரி விளம்பரப்படுத்தி, கட்சி பிளவை ஏற்படுத்திவிடும்” என்று அவர்களை அறிவுறுத்தினார். கார்கே, நாளை (நவம்பர் 22) கர்நாடகாவுக்கு வருகிறார். அப்போது சிவகுமாரின் ஆதரவாளர்கள் மேலும் பலர் அவரை சந்தித்து இதே கோரிக்கையை முன்வைக்க இருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, சிவகுமார் மறைமுகமாக நெருக்கடி கொடுத்து வருகிறார். அவர், கட்சி தலைவராக இருந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு “நான் என்றென்றும் இருக்க முடியாது, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறி, தலைமை மாற்றத்துக்கு காரணமாக இருக்கிறார். ஆனால், முதல்வர் சித்தராமையா இதை மறுத்துள்ளார்.
அவர், “நான் 5 ஆண்டுகள் முழுமையாக முதல்வராக இருப்பேன். அடுத்த ஆண்டும் நான் தான் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வேன்” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இன்று (நவம்பர் 21) மற்றும் நாளை மைசூரு, சாம்ராஜ்நகர் செல்ல இருந்த சித்தராமையா, தனது பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். இது முதல்வர் பதவி மாற்ற விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் அரசு, 2023-ல் ஆட்சிக்கு வந்தபோது இரு தலைவர்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. ஆனால், இப்போது சிவகுமார் வட்டத்தினர் ‘நவம்பர் புரட்சி’ என்று அழைத்து, பதவி மாற்றத்தை வலியுறுத்தி வருகின்றனர். சித்தராமையா வட்டத்தினர், அமைச்சரவை மாற்றம் மட்டுமே நடக்கும், முதல்வர் மாற்றம் இல்லை என்று கூறுகின்றனர்.
கட்சியின் உச்ச தலைமை, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ராகுல் காந்தியின் முடிவுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. கர்நாடக அரசின் எஞ்சிய 2.5 ஆண்டுகள், கட்சி ஒற்றுமைக்கு சவாலாக மாறலாம் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: எங்க பேரை ஏன் போடல?! காங்., பெண் நிர்வாகிகள் அதிருப்தி! அழைப்பிதழால் சர்ச்சை!