கர்நாடக முதல்வரின் அரசியல் செயலாளர் டிஸ்மிஸ்.. காரணம் இதுதான்..!!
பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 ஆர்சிபி ரசிகர்கள் உயிரிழந்த சம்பவத்தில், கர்நாடக முதல்வரின் அரசியல் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 18வது ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் தனது 18 ஆண்டுகால கனவை நினைவாக்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
இதனையடுத்து வெற்றி கோப்பையுடன் சொந்த ஊர் திரும்பிய பெங்களூர் அணி கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு சென்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் பெங்களூரு அணி வீரர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வரவேற்றார். தொடர்ந்து முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை பெற்றனர்.
இதையும் படிங்க: கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!
தொடர்ந்து பெங்களூரு அணி வீரர்கள், சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டனர். அப்போது, பெங்களூரு அணி வீரர்களை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர சம்பவத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார், பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவத்திற்கு கர்நாடகா அரசே காரணம் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.
இதனையடுத்து இந்த சம்பவத்தில், காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே, ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்சிபி வெற்றிப் பேரணி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு தவறான ஆலோசனையை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் குவிந்த நிலையில், முதல்வரின் அரசியல் செயலாளராக இருந்த கெம்பா கோவிந்தராஜ் அதிரடியாக அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்.. தானாக முன்வந்து விசாரிக்கிறது கர்நாடக ஐகோர்ட்..!
 by
 by
                                    