மேகதாது எதிர்ப்பு: கர்நாடகாவில் ‘முழு அடைப்பு’! தமிழகத்துக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை! எல்லையில் பதற்றம்!
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தை கண்டித்து, கர்நாடகா - தமிழக எல்லையான அத்திப்பள்ளி யில் இன்று கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன.
தமிழக வாகனங்கள் கர்நாடகா வரக்கூடாது! அத்திப்பள்ளியில் இன்று போராட்டம்... எல்லையில் பரபரப்பு
மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்து, கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, தமிழக - கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் இன்று மதியம் 12.30 மணிக்கு போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து பாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்து, வரும் 13ம் தேதி கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு சென்ற அவர், முழு அடைப்பு போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா அரசு மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: முழு கொள்ளளவை எட்டியது கபினி அணை... தமிழகத்தை நோக்கி 27 ஆயிரம் கனஅடி காவிரி நீர் திறப்பு!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரில் பெரும்பகுதி கடலில் கலப்பதாகவும், இதனால் கர்நாடக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார். கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் மாநில விவசாயிகளின் தேவைக்காக கட்டப்பட்டவை என்றும் அவர் கூறினார்.
மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசு இடையூறு செய்வதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அத்திப்பள்ளியில் இன்று போராட்டம் நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். போராட்டத்தின்போது தமிழக மக்கள் மற்றும் தமிழக வாகனங்கள் கர்நாடகாவுக்குள் வரக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, போராட்டம் நடைபெறும் நேரத்தில் தமிழகத்தில் இருந்து செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அத்திப்பள்ளி எல்லையிலேயே நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று கர்நாடகா செல்லும் தமிழக பயணிகள் கூடுதல் கவனத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேகதாது அணை திட்டம் மற்றும் காவிரி நீர் பங்கீடு தொடர்பான விவகாரம் நீண்ட காலமாக இரு மாநிலங்களுக்கும் இடையே அரசியல் மற்றும் சட்ட ரீதியான விவாதங்களுக்கு காரணமாக இருந்து வருகிறது. தற்போது கன்னட அமைப்புகளின் போராட்ட அறிவிப்பால், தமிழக - கர்நாடகா எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
அதேநேரத்தில், போராட்டத்தால் பொதுமக்களின் அன்றாட பயணம் மற்றும் இரு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து, சரக்கு போக்குவரத்து எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பது இன்று தெரியவரும்.
இதையும் படிங்க: விடிந்ததுமே கர்நாடகாவுக்கு காத்திருந்த ஷாக்... ஆடிப்பெருக்கில் தமிழகத்திற்கு ஓடோடி வரும் காவேரி...!