ஸ்கூல் ஹெட்மாஸ்டரை மாற்ற இப்படி ஒரு செயலா..!! உசுரு போனா திரும்ப வருமா..? கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!
கர்நாடகாவில் இஸ்லாமிய தலைமை ஆசிரியரை மாற்ற பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், ஹூள்ளிக்கட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், 'ஶ்ரீராம் சேனா' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிட்டத்தட்ட 13 வருடங்களாக அங்கு பணியாற்றி வரும் பள்ளியின் இஸ்லாமிய முதல்வர் சுலைமான் கொரிநாயக் என்பவரை பதவி நீக்கம் செய்யும் நோக்கில், குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், தண்ணீரை அருந்திய 11 மாணவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி முதல்வரின் சிறப்பான சேவை காரணமாக பணியிடமாற்றம் செய்யவில்லை. இதையடுத்து அவருக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்தி, பள்ளியில் இருந்து மாற்றி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன்தொடர்ச்சியாக பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விஷத்தை கலந்துள்ளனர்.
இதையும் படிங்க: ED-யிடம் சிக்கிய காங். எம்எல்ஏ கே.ஒய். நஞ்சேகவுடா.. ரூ.1.32 கோடி சொத்துக்கள் பறிமுதல்..!
முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவத்தை பள்ளி மாணவர் ஒருவரைப் பயன்படுத்தி அமைப்பினர் நிகழ்த்தியதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்து, இது ஒரு "பயங்கரவாத செயல்" என்று கூறி, குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். பெற்றோர்கள் மத்தியில் பயம் நிலவுவதால், பலர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட சாகர் பாட்டீல், கிருஷ்ணா மதர், மகன்கௌடா பாட்டீல் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பெலகாவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பீமாசங்கர் குலேத் கூறுகையில், கடந்த ஜூலை 20ம் தேதி அந்தப் பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையின்போது தண்ணீர் தொட்டியில் ஒரு வித நாற்றம் வந்தது. அதற்குள்ளேயே ஒரு பூச்சி மருந்தின் பாட்டிலும் கண்டறியப்பட்டது. பரிசோதனையில் தண்ணீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்தோம். அவர்களிடம் விசாரித்ததில் பள்ளியில் பணியாற்றும் இஸ்லாமியை தலைமை ஆசிரியரை டிரான்ஸ்பர் செய்வதற்காக இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இதை செயல்படுத்தியது தெரியவந்தது என்றார்.
இச்சம்பவம் சமூகத்தில் மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல்கள் நாகரிக சமூகத்திற்கு அவமானமாகும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: ஆபத்தான மலைப்பகுதி.. குகையில் குழந்தைகளுடன் தங்கிய ரஷிய பெண்.. பத்திரமாக மீட்ட போலீசார்..!