"கூட்ட நெரிசல் திட்டமிட்டதா?" தவெக நிர்வாகிகள் சிபிஐ-யிடம் கிடுக்கிப்பிடி கேள்வி! தொடரும் விசாரணை!
கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநாட்டில் அரங்கேறிய கோரமான கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணை அதிகாரி சுனில் குமார் தலைமையில் தவெக நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், மாநாட்டு அனுமதி முதல் பாதுகாப்புக் குறைபாடுகள் வரை பலத்த கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுத் திட்டமிடலில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் குறித்து சிபிஐ அதிகாரிகள் ஆவணங்களுடன் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக-வின் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், இந்தியாவையே உலுக்கிய ஒரு துயரச் சம்பவமாக மாறியது. இந்தச் சம்பவத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மாநில அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணையில் திருப்தி அடையாத உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையைச் சிபிஐ-க்கு மாற்றியது. அதன்படி, இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பணி மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகினர்.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழு வருகை: பொதுமக்கள் மனு அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!
விசாரணை அதிகாரி சுனில் குமார் தலைமையிலான குழு, சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. “கரூரில் பொதுக்கூட்டம் நடத்த எப்போது அனுமதி கோரப்பட்டது? எவ்வளவு பேர் கூட அனுமதி வழங்கப்பட்டது? திட்டமிடப்பட்ட நேரத்தை விட விஜய் வருகையில் தாமதம் ஏற்பட்டதா? அதற்காகத் தொண்டர்களை 4 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வைத்தது ஏன்?” எனப் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவெக தரப்பில் செய்யப்பட்ட தன்னார்வலர் ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை வழங்கிய கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள், வீடியோ ஆதாரங்கள் மற்றும் அனுமதி கோரி வழங்கப்பட்ட கடிதங்களை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். அனுமதியளித்த அதிகாரிகள் யார், அந்த இடத்தில் பாதுகாப்பை மேற்பார்வையிட்ட அதிகாரிகள் யார் என்பது குறித்தும் காவல்துறை தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறித்துத் தவெக நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. விசாரணையின் இறுதியில் பெறப்படும் வாக்குமூலங்கள், ஏற்கனவே கரூரில் சிபிஐ அதிகாரிகள் சேகரித்த சாட்சியங்களுடன் ஒப்பிடப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி வருகை!