முற்றுபெறாத கீழடி பிரச்சனை..! மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்..!
கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கீழடி அகழாய்வு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றங்கரையில் 2013 முதல் நடைபெற்று வரும் ஒரு முக்கியமான தொல்லியல் ஆய்வாகும். இது தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை, குறிப்பாக கி.மு. 6-ஆம் நூற்றாண்டு வரையிலான எழுத்தறிவு மற்றும் நகர நாகரிகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு முதலில் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் தமிழ்நாடு தொல்லியல் துறையால் தொடரப்பட்டது.
மத்திய கலாச்சார அமைச்சகம், அறிக்கையில் திருத்தங்கள் தேவை என்று கூறி, அதை மீண்டும் அனுப்பியதாகவும், அறிவியல்பூர்வமான கூடுதல் தரவுகள் தேவை என கூறியது. கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடுவதில் மத்திய அரசின் மறுப்பு கூறி இருப்பது குறித்து பல விமர்சனங்களும் கருத்துக்களும் தமிழ்நாட்டில் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில், மொத்தம் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்டு 12 முதல் 18-ம் தேதி வரை பாராளுமன்ற தொடருக்கு இடைவெளி விடப்படுகிறது. இதையடுத்து, இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: மழைக்கால கூட்டத் தொடர்: என்னென்ன செய்யணும்? திமுக எம்.பிகளுக்கு முதல்வர் அறிவுரை..!
அதேபோல, எதிர்க்கட்சிகளும் பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு, பீகாரில் நடத்தப்படும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்ப திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், கீழடி ஆய்வறிக்கையை வெளியிடுவதில் மத்திய அரசு தாமதம் காட்டுவதால் அது குறித்து அவையை ஒத்திவைத்து ஆலோசிக்க மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: காமராஜர் மீதான களங்கம்... கருணாநிதி வகையறாவின் வன்மம்! நடிக்காதீங்க ஸ்டாலின்.. விளாசிய இபிஎஸ்..!