×
 

#BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

இன்று காலை கேரள மாநிலத்தின் இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் நேற்று ஐந்து மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாநில அரசு, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட அனைத்து மீட்புக் குழுக்களும் முன்கூட்டியே தயார் நிலையில் இருந்தனர்.

நேற்று இரவு பெய்த கனமழையால் இடுக்கி, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் மிக அதிகளவில் மழைப்பொழிவு பதிவானது. இதன் காரணமாக இந்த மூன்று மாவட்டங்களிலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கோட்டயம் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: #BREAKING கேரளாவில் மீண்டும் சோகம்... இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு... மண்ணில் புதைந்தவர்களின் நிலை என்ன?

மலைப்பாங்கான பகுதிகள் என்பதால், வீடுகள் ஒன்றுக்கொன்று தொலைவில் அமைந்துள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதால், ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், மீட்புப் பணிகளில் சிரமம் நிலவி வருவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இடுக்கி, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. காணாமல் போன உறவினர்கள் அல்லது நண்பர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும், ஆபத்தான மற்றும் தாழ்வான பகுதிகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்புக் குழுக்களை தொடர்புகொள்ளவும் இந்த கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், இடுக்கி மாவட்டத்தில் ஜீப் வாகனங்கள் மூலம் அபாய எச்சரிக்கை அறிவிப்புகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. மலைப்பாங்கான மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு உடனடியாக செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். கனமழை மேலும் நீடிக்கும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. பலத்த காற்று வீசியதால், நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் தண்ணீர் காற்றில் சிதறி, மழைபோல் சுற்றுலாப் பயணிகள் மீது விழுந்தது. இதனால் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர்.

தொடர்ந்து இடுக்கி, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ராமேஸ்வரம்–கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல சாலைகள் சேதமடைந்துள்ளதால், அவற்றை சீரமைத்த பிறகே மீட்புக் குழுக்கள் சில பகுதிகளுக்குச் செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கேரளாவில் அதிர்ச்சி... போதைப்பொருள் கும்பலுடன் ஆசிரியைகளுக்கு நேரடி தொடர்பு! சர்வதேச நெட்வொர்க் அம்பலம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share