தங்கம் திருடியவர்கள் யாரப்பா..? ‘தோழர்கள்’ தானே ஐயப்பா!! கேரளாவில் காங்கிரசை ஜெயிக்க வைத்த பலே பாடல்
கேரளாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப். கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்.) படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக, 45 ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்திய திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக அமைந்தது காங்கிரஸ் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு நையாண்டி பாடல்தான் என்று கூறப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடந்த தங்க கொள்ளை விவகாரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் பாடல், வாக்காளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
2019இல் சபரிமலை கோவிலின் துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்க தகடுகள் பராமரிப்புப் பணிக்காக அகற்றப்பட்டன. மீண்டும் தகடுகள் பொருத்தப்பட்ட போது சுமார் 4 கிலோ தங்கம் காணாமல் போனது அம்பலமானது.
இதையும் படிங்க: எலெக்சனுக்கு வந்தீங்களா? பிக்னீங் வந்தீங்களா? கேரளாவில் படுமோசமான தோல்வி! அதிமுக பொறுப்பாளர்களுக்கு டோஸ்!
இதில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியுமான பத்மகுமார், முன்னாள் தலைவர் வாசு, பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் ஆட்சிக் காலத்திலேயே இந்தக் கொள்ளை நடந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சில மார்க்சிஸ்ட் பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தை காங்கிரஸும் பா.ஜ.க.வும் தேர்தல் பிரசாரத்தில் ஆயுதமாக்கின. குறிப்பாக, காங்கிரஸ் சார்பில் பிரபல தமிழ் பக்தி பாடலான 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' மெட்டில் ஒரு நையாண்டி பாடல் உருவாக்கப்பட்டது. இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி, ஆளும் கூட்டணிக்கு எதிரான அலை உருவாக்க உதவியது என்று கூறப்படுகிறது.
இந்தப் பாடல் வாக்காளர்களிடையே, குறிப்பாக இந்து பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாகவே உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் பெரும் தோல்வியைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு!! செப்புத்தகடு என மாற்றி எழுதிய மாஜி அதிகாரி! விசாரணையில் வெளியான பகீர்!