மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!
மதமாற்றம், ஆள் கடத்தல் புகாரில் கைதான கேரள கன்னியாஸ்திரிகளுக்கு NIA நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கேரளாவைச் சேர்ந்த இரு கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள், வந்தனா பிரான்சிஸ் மற்றும் பிரீத்தி மேரி, ஆள் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த ஜூலை 25ம் தேதி அன்று துர்க் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கன்னியாஸ்திரிகளுடன் மூன்றாவதாக சத்தீஸ்கர் மாநிலம் நாராயணன்பூரை சேர்ந்த சுக்மான் மண்டாவி என்ற ஒரு இளம்பெண் இருந்தார். இவர் 18 மற்றும் 19 வயதுள்ள 3 இளம் பெண்களை கட்டாய மதம் மாற்றம் செய்யும் வகையில் கடத்தி 2 கேரள கன்னியாஸ்திரிகளிடம் கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர், இளம்பெண் கடத்தப்படுவதாக புகார் அளிக்க, அதன் பேரில் கன்னியாஸ்திரிகள் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இதற்கு கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. வேலைக்கு அழைத்து வருவதற்காகவே அந்த 3 இளம் பெண்களை கன்னியாஸ்திரிகள் ரெயிலில் அழைத்து வந்ததாக கிறிஸ்தவ கூட்டமைப்பு விளக்கம் அளித்தது.
இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த், கிருஷ்ணா.. நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் அதிரடி..!
இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் தூண்டிய நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்தக் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் என்று குறிப்பிட்டனர்.
கன்னியாஸ்திரிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சத்தீஸ்கர் மத சுதந்திரச் சட்டம், 1968 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களுடன் இருந்த சிறுமிகள் அரசு காப்பகத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று போதுமான ஆதாரங்கள் இல்லாததால், பிலாஸ்பூர் NIA நீதிமன்றம் கன்னியாஸ்திரிகளுக்கு ரூ.50 ஆயிரம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. மேலும் அவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. ஜாமீனை தொடர்ந்து இரண்டு கன்னியாஸ்திர்களும் இன்று சிறையில் இருந்து வெளியே வந்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி மூன்றாவதாக கைது செய்யப்பட்ட இளம்பெண்ணும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளை கேரள எம்.பி சந்தோஷ்குமார், கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றனர். இந்தச் சம்பவம் சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் மத சுதந்திரம் குறித்து நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த், கிருஷ்ணா.. நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் அதிரடி..!