×
 

இனி 'கேரளா' இல்லை.. கேரளம்! மாநில பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை இன்று (பிப்ரவரி 24, 2026) நடைபெற்ற கூட்டத்தில், கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என்று மாற்றம் செய்வதற்கான கேரள அரசின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

கேரளா மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' (Keralam) என்று மாற்றம் செய்யக் கோரிய அம்மாநில அரசின் நீண்ட காலக் கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய பிரதமர் அலுவலகமான ‘சேவா தீர்த்தில்’ (Seva Teerth) நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கேரள சட்டமன்றம் கடந்த ஜூன் 24, 2024 அன்று ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், மத்திய அமைச்சரவை இந்தப் பெயர் மாற்றத்திற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மலையாள மொழியில் 'கேரளம்' என்று அழைக்கப்படும் மாநிலத்தின் பெயர், அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் 'கேரளா' என்றே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் மக்கள் ஒன்றிணைந்த 'கேரளம்' அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதனை அங்கீகரிக்கும் விதமாகவே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து, கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026 (Kerala Alteration of Name Bill, 2026) குடியரசுத் தலைவரால் கேரள சட்டமன்றத்தின் கருத்துக்காக அனுப்பி வைக்கப்படும். பின்னர், நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு முறைப்படி பெயர் மாற்றம் நடைமுறைக்கு வரும்.

இதையும் படிங்க: கேரளா: நீர்வழி சுரங்க பாதையில் ஒளி-ஒலி காட்சிகளுடன் பயணம்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்..!!

கேரளாவில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை மீட்டெடுக்கும் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல் ஒருமித்த கருத்து: முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு மாநில பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இனிவரும் காலங்களில் அனைத்து மொழிகளிலும், அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் 'கேரளம்' என்ற பெயரே பயன்படுத்தப்படும். இது மாநிலத்தின் மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தை உலகிற்குப் பறைசாற்றும் ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: மத்திய அரசுக்கு எதிராக பாரத் பந்த்: கேரளாவில் நாளை முழு அடைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share