×
 

2018 வெள்ளம், 2020 நிலச்சரிவு! ஆகஸ்ட் வந்தாலே பயம்... கேரள மக்களை நடுங்க வைக்கும் பருவமழை!

இந்த ஆண்டும் ஜூலை இறுதியில் இருந்து மழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் நீர்நிலைகளில் சிக்கிய விபத்துகள் காரணமாக இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் ஆகஸ்ட் மாதம் பெய்யும் கனமழை மக்களின் மனதில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடியில் 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் 70 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த துயர நினைவு மீண்டும் மக்களின் மனதில் உயிர்ப்பெடுத்துள்ள நிலையில், இந்த ஆண்டும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிப்பது வழக்கம். பொதுவாக ஜூலை மாதத்தில் மழை தீவிரமாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆகஸ்ட் மாதத்திலேயே அதிக மழை பெய்து உயிரிழப்புகள் மற்றும் இயற்கை பேரிடர்களை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை கேரளாவையே புரட்டிப் போட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 480 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததுடன், சாலைகள், பாலங்கள், விவசாய நிலங்கள் என மாநிலம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இடுக்கி மாவட்டம் உள்ளிட்ட மலைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதையும் படிங்க: கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

அதனைத் தொடர்ந்து, 2020 ஆகஸ்ட் 6 ஆம் தேதி மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட 70 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கேரளாவின் மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டும் ஜூலை இறுதியில் இருந்து மழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் நீர்நிலைகளில் சிக்கிய விபத்துகள் காரணமாக இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இடுக்கி மாவட்டத்திலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. பேரிடர் மேலாண்மை குழுக்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: சபரிமலை பக்தர்களுக்கு அவசர அறிவிப்பு! பம்பையில் வெள்ளப்பெருக்கு! பயணத்தை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share