×
 

ஆபத்தான தெருநாய்களுக்கு கருணைக்கொலை அனுமதி! கேரள அரசின் புதிய உத்தரவால் பரபரப்பு

தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் மூலம் நரம்பு வழியாக உரிய மருத்துவ மருந்துகளை செலுத்தி, வலியற்ற முறையில் உயிரை பிரிக்கும் மருத்துவ நடைமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வெறிநாய் கடி சம்பவங்களும் தொடர்ந்து பதிவாகி வரும் நிலையில், பொதுமக்களுக்கு ஆபத்தாக இருக்கும் குறிப்பிட்ட தெருநாய்களை கருணைக்கொலை செய்ய மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும், கேரளாவில் உள்ள அனைத்து தெருநாய்களையும் கொல்ல அரசு அனுமதி வழங்கவில்லை. குணப்படுத்த முடியாத தீவிர நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், வெறிநோயால் பாதிக்கப்பட்டவை மற்றும் பொதுமக்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வன்முறையாக நடந்து கொள்ளும் நாய்கள் மட்டுமே குறிப்பிட்ட நடைமுறைகளின் கீழ் கருணைக்கொலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து மேற்கொள்ள உள்ளன. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் ‘தெருநாய் மேலாண்மைக் குழு’ அமைக்கப்பட உள்ளது. ஒரு நாயை கருணைக்கொலை செய்யும் முடிவு தன்னிச்சையாக எடுக்கப்படாது. குழுவின் தலைவர் மற்றும் தகுதி பெற்ற அரசு கால்நடை மருத்துவரின் எழுத்துப்பூர்வமான பரிந்துரை கிடைத்த பின்னரே அதற்கான அனுமதி வழங்கப்படும்.

இதையும் படிங்க: உலக யானைகள் தினத்தில் சோகம்! வாளையாறில் ரயில் மோதி தாய், குட்டி யானைகள் பலி! கண்ணீர் சம்பவம்!

தெருநாய்களைப் பிடிப்பது முதல் கருணைக்கொலை செய்வது வரை எந்தவிதமான கொடூரமான முறைகளையும் பயன்படுத்தக் கூடாது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுடுவது, விஷம் கொடுப்பது அல்லது தடியால் அடிப்பது போன்ற முறைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.

அதற்குப் பதிலாக, தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் மூலம் நரம்பு வழியாக உரிய மருத்துவ மருந்துகளை செலுத்தி, வலியற்ற முறையில் உயிரை பிரிக்கும் மருத்துவ நடைமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மற்ற நாய்கள் முன்னிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என்றும் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக, பிடிக்கப்படும் தெருநாய்கள் உடனடியாக கருணைக்கொலை செய்யப்படாது. அவை இரண்டு முதல் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும். அந்த காலகட்டத்தில் விலங்கு நல அமைப்புகள் அல்லது தனிநபர்கள் குறிப்பிட்ட நாயை தத்தெடுத்து பராமரிக்க முன்வந்தால், அதிகாரப்பூர்வ நடைமுறைகளின் மூலம் அதை அவர்களிடம் ஒப்படைக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், விலங்குகள் நலன் தொடர்பான விதிகளையும் பின்பற்றும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மத்திய அமைச்சருக்கே இந்த நிலைமையா? கார் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ்கோபி! அதிகாரிகள் அதிர்ச்சி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share