வீல் சேர் கொடுக்கல.. கோவை அரசு மருத்துவமனையில் 2 மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்..!
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்படாத விவகாரத்தில் இரு மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்படாத விவகாரத்தில் இரு மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மருத்துவமனையின் நிர்வாகக் குறைபாடுகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 84 வயது முதியவருக்கு உரிய நேரத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட நோயாளியின் மகன் காளிதாஸ் சமூக வலைதளத்தில், எனது தந்தைக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. சர்க்கரை நோயால் கால் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். தந்தையை மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டிடத்திற்கு பரிசோதனைக்கு அழைத்து வந்தபோது வீல் சேர் இல்லாமல் அலைக்கழிக்கப்பட்டோம்.
இதையும் படிங்க: முதலில் சென்னை.. இப்போ கோவை.. எகிறியது டீ, காபி விலை..!! மக்கள் கடும் அதிருப்தி..!
2 மணி நேரம் காத்து இருந்தும் யாரும் வரவில்லை. மேலும் ரூ.100 கொடுத்தால் தருகிறேன் என ஒரு ஊழியர் கூறினார் என்று கூறியிருந்தார். மேலும், பணத்தை கொடுப்பதாக கூறிய பிறகு ஏற்கனவே காத்திருப்பில் உள்ளவர்களை முடித்துவிட்டு வருகிறேன். அதுவரை காத்திருங்கள் என்று கூறினார். ஒருகட்டத்தில் கடுப்பான அவர் சிகிச்சையே வேண்டாம் என திரும்பி சென்று விட்டதாக அதில் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலாகி, மருத்துவமனையின் அலட்சியப் போக்கு குறித்து பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்களைத் தூண்டியது. இதையடுத்து, மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், மருத்துவமனையில் சக்கர நாற்காலிகள் கிடைக்கப்பெறவில்லை என்று தெரியவந்தது, மேலும் இதற்கு பொறுப்பான மேற்பார்வையாளர்களின் கவனக்குறைவு உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையின் முதல்வர் கீதாஞ்சலி உத்தரவின் பேரில், மேற்பார்வையாளர்களான எஸ்தர்ராணி, மணிவாசகம் ஆகியோர் 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக யாரும் இதுவரை புகார் கூறவில்லை புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுப்போம் என்றும் லஞ்சம் கேட்பதை ஏற்க முடியாது என்றும் கீதாஞ்சலி கூறி உள்ளார்.
கோவை அரசு மருத்துவமனை, நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மையமாக உள்ளது. இருப்பினும், படுக்கை பற்றாக்குறை, ஊழியர்கள் பற்றாக்குறை, மற்றும் அடிப்படை வசதிகளின் குறைபாடு போன்ற பிரச்சினைகள் அவ்வப்போது விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இந்தச் சம்பவம், மருத்துவமனையில் நோயாளி நலனுக்காக அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
மருத்துவமனை நிர்வாகம், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. மேலும், சக்கர நாற்காலிகள் மற்றும் பிற அத்தியாவசிய உபகரணங்களை உடனடியாக வாங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசுக்கு நினைவூட்டியுள்ளது.
சக்கர நாற்காலி வழங்காததால் தந்தையை மகன் கைத்தாங்கலாக இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாக பரவியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பாரதியார் வரிகளுடன் பாம் மிரட்டல்! கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வித்தியாச இமெயில்..!