கும்பகோணம் பள்ளி தீ விபத்து... 22 ஆண்டுகளாக மறையாத சோகம்! 94 குழந்தைகளை நினைவுகூர்ந்து உருக்கமான அஞ்சலி!
கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான நிகழ்வின் 22ம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 16) அனுசரிக்கப்பட்டது.
தமிழகத்தை உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22-வது ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 16) உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி, கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிருடன் கருகி உயிரிழந்தனர். தமிழக வரலாற்றில் மிகப்பெரிய பள்ளி விபத்துகளில் ஒன்றாக பதிவான இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்குப் பிறகு பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து நாடு முழுவதும் தீவிரமாக கவனம் செலுத்தப்பட்டது.
22 ஆண்டுகள் கடந்தும் அந்த சோக நினைவுகள் இன்னும் மாறவில்லை. இந்நிலையில், இன்று பள்ளி முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர் சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிங்க: கோட்டைக்குள் ஸ்லீப்பர் செல்கள்?! சாட்டையை சுழற்றும் CM விஜய்! IAS அதிகாரிகளை தூக்கியடிப்பதன் பின்னணி!
பின்னர் பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் அஞ்சலி செலுத்திய பெற்றோர், தங்களது குழந்தைகளின் நினைவுகளை கண்கலங்க பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், இதுபோன்ற துயர சம்பவங்கள் இனி எந்த பள்ளியிலும் நிகழக்கூடாது என்பதற்காக கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். குழந்தைகளின் உயிர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் தொடர்ந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து, தமிழகத்தின் கூட்டு நினைவில் அழியாத வலியாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16-ஆம் தேதி உயிரிழந்த 94 குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. காலம் கடந்தாலும் அந்த குழந்தைகளின் நினைவுகளும், அவர்களின் குடும்பங்களின் வேதனையும் மறக்க முடியாத வரலாறாகவே தொடர்கிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகள்... 10 இடங்களுக்கு அனுமதி; எதிர்ப்பும் தீவிரம்!