நேபாளத்தின் இயற்கை அழகில் தமிழர்கள்.. வைரலாகும் கடைசி ஃபோட்டோ..!! வேதனையில் உறவினர்கள்!!
தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை தெரியாமல் அவர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.
வடக்கு நேபாளத்தின் கோஷி ஆற்றின் மேல் பகுதியில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திடீர் காட்டாற்று வெள்ளம் உருவானது. இந்தப் பேரிடரில் இதுவரை 270 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதோடு மின்சாரக் கட்டமைப்புகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க நேபாள ராணுவ ஹெலிகாப்டர்களுடன் தனியார் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தத் துயரச் சூழலில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். சென்னை குரோம்பேட்டையில் இயங்கும் மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி மூலம் கடந்த 14 ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 49 பேர் நேபாள யாத்திரை மேற்கொண்டனர்.
யாத்திரையை முடித்து தாயகம் திரும்ப வேண்டிய அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. அவர்களில் சிலர் கடைசியாக எடுத்த குழுப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் படத்தைப் பார்த்த உறவினர்கள் கண்ணீர் மல்கி வருகின்றனர். தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை தெரியாமல் அவர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: நேபாள வெள்ளப்பெருக்கு..! தஞ்சையை சேர்ந்த 17 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை..! ஆட்சியர் பூங்கொடி அதிர்ச்சி தகவல்..!!
தமிழக முதல்வர் விஜய் இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளார். நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவில் மீட்பதற்கான வழிமுறைகள் குறித்து அவர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து ஆஷிஷ் குமார் ஐஏஎஸ்ஸை நேபாளத்திற்கு அனுப்பி மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளப்பெருக்கில் சிக்கியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். நேபாள அரசு மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தகவல் சேகரிப்பு நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்தாலும், தொலைத்தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டதால் உறவினர்களுக்கு உறுதியான செய்திகள் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை அளிக்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரிடர் சூழலில் சிக்கிய தமிழர்களின் பாதுகாப்பான திரும்புதலுக்காக அனைவரும் பிரார்த்தித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்... தவிக்கும் குடும்பங்கள்..! முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.!