தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்!
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அன்போடு அழைக்கப்படும் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மைசூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
தென்னிந்தியத் திரை உலகின் மூத்த பின்னணிப் பாடகியும், ரசிகர்களால் 'இசையரசி' என்று அன்போடு அழைக்கப்படுபவருமான எஸ்.ஜானகி (வயது 88) அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் கர்நாடக மாநிலம் மைசூரில் இன்று காலமானார். அவரது மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை உலகினரும், கோடிக்கணக்கான இசை ரசிகர்களும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, பின்னர் மைசூரில் வசித்து வந்த எஸ்.ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 17 இந்திய மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி அசாத்திய சாதனை படைத்தவர். 1957 ஆம் ஆண்டு வெளியான 'விதியின் விளையாட்டு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர், தனது காந்தக் குரலால் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகத் தென்னிந்தியத் திரை உலகை ஆட்டிப்படைத்தார். இசைத்துறையில் இவரையாற்றிய உன்னதப் பணிகளுக்காக 4 முறை தேசிய விருதுகளையும், பல்வேறு மாநில அரசுகளின் 33 உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி, இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடி அனைத்துத் தலைமுறை ரசிகர்களின் இதயங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக 1960, 1970 மற்றும் 1980-களில் பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்பிபி, யேசுதாஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட முன்னணிப் பாடகர்களுடன் இணைந்து எண்ணற்ற தத்துவப் பாடல்களையும், காதல் கீதங்களையும் பாடியுள்ளார். அதிலும், இளையராஜாவின் இசையமைப்பில் எஸ்பிபியுடன் இணைந்து எஸ்.ஜானகி பாடிய பாடல்கள் இன்றும் தமிழ் நெஞ்சங்களின் எக்காலத்துத் தேடலாகவும், மிகப்பிரபலமான காவியங்களாகவும் விளங்குகின்றன. அவரது உடல்நலக் குறைவால் ஏற்பட்ட இந்த மறைவு, இந்திய இசைத் துறைக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!
இதையும் படிங்க: முதலில் மணிமண்டபத்துக்கு வாங்க...அரசு வேலை கேட்ட அன்புமணிக்கு அன்னியூர் சிவா பதில்!